விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகேயுள்ள குறவன்குப்பம் கிராமத்தைச் சார்ந்த நீலகண்டன் என்பவரின் மகளும் கல்லூரி மாணவியுமான ராதிகா என்பவரும் அவருடைய உறவினரும் காதலருமான விக்னேஷ் என்பவரும் ஜூன் 10ஆம் தேதி குறுகிய நேர இடைவெளியில் அடுத்தடுத்து தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனர் என்பது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது.
சமூக வலைதளமான முகநூல் பதிவுகளால் நேர்ந்த விபரீதமான விளைவுகள்தான் இந்தத் துயரமான சாவுகளுக்கு காரணம் என்பது தாளமுடியாத வேதனையாக உள்ளது. வாழவேண்டிய வயதில் இரு உயிர்கள் திடீரெனப் பலியாகும் ஒரு அவலநிலை, முகநூல் போன்ற சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதால் நிகழ்ந்திருப்பது பெருந்துயரத்தை அளிக்கிறது.
இந்நிலையில், சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவது தொடர்பாக, குறிப்பாக, பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், புதிய வலுவான சட்டமொன்றை இயற்ற வேண்டுமெனவும், ஆபாச வலைதளங்களை முற்றிலுமாக இந்தியாவில் தடை செய்ய வேண்டுமெனவும் மத்திய, மாநில அரசுகளுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.