சென்னை: சர்வதேச செஸ் கூட்டமைப்புத் தலைவர் ஆர்காடி வோர்க்கோவிச் மற்றும் துணைத் தலைவர் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் சென்னை மகாபலிபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் நடைபெறும் இடத்தில் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது முதலில் பேசிய சர்வதேச கூட்டமைப்பு தலைவர் ஆர்காடி வோர்க்கோவிச், "சர்வதேச செஸ் கூட்டமைப்பு தேர்தலில் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. இந்த 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. நான்கு மாதங்களில் அனைத்து பணிகளையும் செய்துகொடுத்த தமிழ்நாடு அரசுக்கும், இந்திய அரசுக்கும் எனது நன்றி.
தற்போது தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன், இன்னும் நான்கு ஆண்டுகளில் ஏற்கனவே செய்துவந்த பணிகளை துரிதப்படுத்தி முடிப்பேன். அதுமட்டுமின்றி பெண்களுக்கான செஸ் என்பதில் அதிக கவனம் செலுத்த இருக்கிறேன். செஸ் கூட்டமைப்பின் நிதியை அதிகரிக்க அனைத்து நாடுகளிலிருந்தும் ஸ்பான்சர்ஷிப் கடைக்க நடவடிக்கை எடுக்க இருக்கிறேன்.
அதுமட்டுமில்லாமல் 'Chess for disabilities', 'chess for orphanage' என பல்வேறு திட்டங்களை கொண்டுவர முடிவு செய்திருக்கிறேன். இந்த முறையை மாற்றுத்திறனாளிகளுக்கான செஸ் போட்டி நடத்த திட்டமிட்டிருந்தேன் அதிக நேரம் கிடைக்காததால் அதை நடத்த முடியவில்லை அடுத்த ஒலிம்பியாட் போட்டியில் மாற்றுத் திறனாளிகளுக்கு என செஸ் போட்டி நடைபெறும். 45 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி நாட்டில் நடைபெறும் " என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய சர்வதேச கூட்டமைப்பு துணைத்தலைவர் விஸ்வநாதன் ஆனந்த், "44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வரும் இந்த நேரத்தில் சர்வதேச கூட்டமைப்புக்கான தேர்தலும் நேற்று நடைபெற்றது. செஸ் ஒலிம்பியாட் மிகப்பெரிய வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.