சென்னை:தமிழ்நாட்டில் சென்னையை அடுத்த பூந்தமல்லி, திருச்சி, தஞ்சாவூர், சேலம், மதுரை புதுக்கோட்டை, சிவகங்கை, கோவை, தருமபுரி மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிகள் இயங்கி வருகின்றன.
இந்த பள்ளிகளில் முதல்வர், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் என 50 சதவீதத்துக்கும் மேல் காலியாக இருப்பதாக கூறி, வழக்கறிஞர் புகழேந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், மொத்தம் உள்ள 10 பள்ளிகளில் ஐந்து பள்ளிகளில் முதல்வர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், 14 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் ஐந்து ஆசிரியர்கள் மட்டுமே பணியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை போன்று 20 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 10 பணியிடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. மேலும், 74 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் 61 பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.