சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார் முதலமைச்சருக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், 'பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கத்திலிருந்து விடுதலைபெற்ற இந்திய சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டு அமுதப் பெருவிழாவை நாம் சிறப்புடன் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நன்றியோடு இந்த நேரத்தில் நினைவுகூர்ந்து அவர்களது போராட்டங்களை போற்றி வருகிறோம். இந்திய சுதந்திரத்திற்கு அனைத்து தரப்பு மக்களுமே பங்களிப்பு செய்துள்ளனர். ஆனால், வரலாறு எழுதுதலில் கடைப்பிடிக்கப்படும் அணுகுமுறை காரணமாக சில வரலாற்று ஆளுமைகள் மட்டுமே சுதந்திரப் போராட்ட தியாகிகளாக பெருமைப்படுத்தப்படும் நிலை உள்ளது.
விளிம்பு நிலை வரலாற்றறிஞர்கள் சுதந்திரப்போராட்டத்தில் பங்களிப்பு செய்த அடித்தள மக்களைப் பற்றி கவனப்படுத்தியுள்ளனர். 1919ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவராக மகாத்மா காந்தியடிகள் பொறுப்பேற்ற பின்னர் அவரால் முன்வைக்கப்பட்ட ஒத்துழையாமை, புறக்கணிப்பு, சட்ட மறுப்பு மற்றும் சிறை நிரப்புவதற்கான நேரடி நடவடிக்கைகள் முதலான போராட்ட வடிவங்கள், அதற்கு முன்பு மக்களால் பயன்படுத்தப்பட்டவைதான் என்பதை வரலாற்று அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்தப் போராட்ட வடிவங்கள் அன்றைய சென்னை மாகாணத்தில் பறையர் சமூகத்தவரால் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக பயன்படுத்தப்பட்டிருப்பதை பிரிட்டிஷ் அரசின் ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன.
சென்னை பூந்தமல்லி பகுதியில் பிரிட்டிஷ் அலுவலர் ரிச்சர்ட் டைட்டன் என்பவர், அதிகமாக வரிவசூலிக்க முயன்ற போது அதற்குக் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. வரி செலுத்தாத மிராசுதார்களின் மிராசி உரிமையை ரத்து செய்ததோடு, தானியப் பகிர்வில் பறையர்களுக்கு இருந்த பாரம்பரிய உரிமையையும் ரிச்சர்ட் டைட்டன் ரத்து செய்துள்ளார். அறுவடையின்போது தங்களுக்குப் பாரம்பரியமாக வழங்கப்படும் தானிய உரிமை பாதுகாக்கப்படவேண்டும் என வலியுறுத்தி பூந்தமல்லி பகுதியிலிருந்த பல கிராமங்களைச் சேர்ந்த பறையர்கள் விவசாயப் பணிகளை புறக்கணித்து பிரிட்டிஷ் அலுவலர்களை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியுள்ளனர். இந்தப் போராட்டம் ஒரு கலகமாக உருவெடுத்துள்ளது.
பிரிட்டிஷ் ஆவணங்களில் பறையர் கலகம்என்று அது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பிரிட்டிஷ் ஆவணங்களை மேற்கோள்காட்டி யூஜின் எஃப் இர்ஷிக் என்ற வரலாற்றறிஞர் தென்னிந்தியாவைக் கட்டமைக்கும் உரையாடல் மற்றும் வரலாறு 1795-1895 ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ் மெட்ராஸ் என்ற தனது நூலில் விரிவாக அதைப் பதிவு செய்திருக்கிறார் பக்கம் (44-48) என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.