சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சரான கருணாநிதியின் நினைவு நாளான நேற்று (ஆகஸ்ட் 7) அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் தலைவரும் ஓய்வு பெற்ற நீதிபதியுமான வீரேந்திர சிங், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்தார்.
அப்போது மருத்துவ படிப்பிற்கு பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீட்டை தமிழ்நாட்டில் அமல்படுத்தியதற்காக வீரேந்திர சிங் நன்றி தெரிவித்தார். இந்நிகழ்வின்போது மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் உடனிருந்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பு... வில்சன், வீரேந்திர சிங் கோரிக்கை
நிகழ்ச்சி முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்த வில்சன், “மருத்துவ படிப்பிற்காக பிற்படுத்தப்பட்டோருக்கு சட்ட ரீதியாக போராடி 27 சதவீதம் பெற்றமைக்கு நாடு முழுவதும் பலரும் முதலமைச்சர் ஸ்டாலிமை பாராட்டி வருகின்றனர்.
அதேபோல் இந்தியாவிற்கே சமூக நீதி வழிகாட்டியாக திகழும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், இந்தியாவை வழிநடத்திச் செல்ல வேண்டும்” என தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் வீரேந்திர சிங் பேசுகையில், “35 வருடம் கழித்து இந்தியாவிலேயே முதல் மாநிலமாக பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி, தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக மாறியுள்ளது. தமிழ்நாட்டை போல மற்ற மாநிலங்களும் இடஒதுக்கீடை அமல்படுத்த வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை.
இந்திய அரசில் பிற்படுத்தப்பட்டோருக்கு தனி அமைச்சகம் அமைப்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தியுள்ளோம். அதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஆதரவளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க: கருணாநிதி நினைவுநாள்: நினைவிடத்தில் ஸ்டாலின் அஞ்சலி