சென்னை போரூர் பகுதியில் இரவு நேரத்தில் போக்குவரத்து காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக திராவிடர் கழகத்தின் பேச்சாளரும், பேராசிரியருமான சுந்தரவல்லி மற்றும் இளைஞர் ஒருவர், இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் சென்றுள்ளனர்.
அப்போது அங்கு வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவல் துறையினர், இருசக்கர வாகனத்தில் வந்த அவர்களை மடக்கினர். அப்போது இருசக்கர வாகனத்தைப் போக்குவரத்து காவலர், கால் மீது ஏறி இறக்கி உள்ளனர். இதில் போக்குவரத்து காவலருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அங்கிருந்த பெண் போக்குவரத்து காவலர் ஒருவர், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த, இளைஞரைப் பிடித்து விசாரித்தார். அப்போது அந்த நபர், பெண் காவலரைத் தாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். மேலும், சுந்தரவல்லி மற்றும் இளைஞர் அங்கிருந்த போக்குவரத்து காவலர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்ததால் காவல் துறையினர் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்தியதால் வாகனத்தைப் பறிமுதல் செய்ய உள்ளதாகவும்; அவர்களிடம் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த சுந்தரவல்லி மீண்டும் காவல் துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.