சென்னை அண்ணாசாலை பகுதியில் நேற்றிரவு (நவ.4) போக்குவரத்து காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, விலை உயர்ந்த இருசக்கர வாகனம் ஒன்றில் தலைக்கவசம் அணியாமல் தனது தோழியுடன் வந்த இளைஞரை ஒருவரை மடக்கிப் பிடித்தனர். விசாரணையில், அந்த இளைஞரிடம் வாகன ஓட்டுநர் உரிமம் இல்லை என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அந்த இளைஞருக்கு போக்குவரத்து காவல் துறையினர் அபராதம் விதித்தனர். இதனால், ஆத்திரமடைந்த இளைஞரும் அவரது தோழியும் காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக, அந்த இளைஞர், தான் ஒரு இன்ஸ்டா பிரபலம் எனவும் தனக்கு ஆயிரக்கணக்கான ஃபாலோவர்ஸ் இருப்பதாகவும் கூறியும், தன்னால் அபராதமெல்லாம் கட்டமுடியாது என்றும் தெரிவித்துள்ளார். அதோடு ‘உங்களை வீடியோ எடுத்து எனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடுவேன்’ எனக்கூறி மிரட்டி உள்ளார்.