சென்னை: பெரம்பூர் வழியாக இன்று பயணிகளை ஏற்றி வந்த மாநகரப் பேருந்தில் ஏறிய பெண் பயணி ஒருவருக்கும், பேருந்தின் நடத்துநருக்கும் இருக்கை தொடர்பான பிரச்சனையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில் பெண் பயணி, நடத்துநர் இடையே கைகலப்பானது.
இதனால் பேருந்து நடு வழியில் நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மற்ற பயணிகள் கீழே இறங்கிய நிலையில், வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் பயணி கீழே இறங்க மறுத்து, தொடர்ந்து தகராறில் ஈடுபட்டதால் சக பயணிகள் அந்த பெண் பயணியை தொடர்ந்து வசைபாடத் தொடங்கினர்.
சுற்றி நடக்கும் எதையும் பொருட்படுத்தாமல் பெண் பயணி தொடர்ந்து நடத்துநரை ஆபாசமாகத் திட்டி தாக்கி வந்த நிலையில், பொறுமை இழந்த நடத்துநரும் பதிலுக்கு பெண் பயணியை தாக்கி கீழே இறங்குமாறு வலியுறுத்தியுள்ளார்.