கரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள் என அனைத்தையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.
பணிக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே இருப்பதால் ஏழை-எளிய குடும்பத்தினர் பலருக்கு பணத் தட்டுப்பாடு ஏற்பட்டு தவித்து வருகின்றனர். குறிப்பாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு இருப்பதால் வீட்டிலிருக்கும் சிறுவர், சிறுமிகளிடம் பூ, தின்பண்டங்கள் உள்ளிட்டவைகளை செய்து கொடுத்து அவர்களை வீடுவீடாக சென்று வியாபாரம் செய்ய பெற்றோர்கள் அனுப்பி வருகின்றனர்.
இதனால் குழந்தைகள் பலர் அதிக பணி சுமைக்கு உட்படுத்தி பல்வேறு கொடுமைகளையும் அனுபவித்து வருகின்றனர். குறிப்பாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் 2015ஆம் ஆண்டு அறிக்கையில் 95.5 விழுக்காடு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தெரிந்த நபர்களாலே நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்திய பெண்களுக்கு அவர்களது வீடுதான் அபாயகரமானதாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஊரடங்கு காலத்தில் குழந்தைகள் வீட்டிலே இருப்பதால் வன்முறைகள் தமிழ்நாட்டில் இருமடங்கு உயர்ந்துள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஆனால் சென்னையில் குழந்தைகள் வன்முறை தொடர்பான குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சென்னையில் கடந்த வருடம் மார்ச், ஏப்ரல், மே மாதத்தில் குழந்தைகள் மீதான வன்முறை தொடர்பாக 84 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால் தற்போது 3 மாதத்தில் 30 பேர் மீது மட்டுமே காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.