சென்னை:ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள கோவிந்தசாமிநகர் இளங்கோ தெருவில் 250 வீடுகள் நீர்நிலைகளின் ஆக்கிரமிப்பில் இருப்பதாக தனிநபர் தொடர்ந்த வழக்கில் வீடுகளை அப்புறப்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடுகளை அகற்றும் பணியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகளின் உதவியுடன் வீட்டை அகற்றும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். கிட்டதட்ட 5 நாட்களில் சுமார் 80 வீடுகள் அகற்றப்பட்டுள்ளன. இன்று காலையில் வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து முதியவர் ஒருவர் தீக்குளித்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து மே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி ட்விட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில், "ஒரு பெருநகரம் என்பது அனைத்து மக்களுக்குமானது மட்டுமல்ல, அந்நகரை உருவாக்கிய பூர்வகுடிகளுக்கானது. அவர்களை குப்பையை போல அள்ளி ஊருக்கு வெளியே தூக்கி எறிவது மக்களாட்சிக்கு நல்லதல்ல. இந்த எதேச்சதிகாரத்தை நீதிமன்றங்களும், அதிகாரவர்க்கங்களும், ஆட்சியாளர்களும் தொடர்ந்து நிகழ்த்துகிறார்கள்.