சென்னை: தமிழகத்தின் தலைநகரம் சென்னை என்றாலே அனைவரின் மனதிலும் முதலில் தோன்றுவது டிராஃபிக் தான். இந்த போக்குவரத்து நெரிசலை குறைப்பது தான் சென்னை போக்குவரத்து காவல்துறையின் பிரதான வேலையாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக மெட்ரோ பணிகள் நடைபெறுவதால் வாகன ஓட்டிகளுக்கு மேலும் தலைவலியாக இருந்து வருகிறது.
இந்தப் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் பல்வேறு வகைகளில் சாலைகள் மாற்றம், புதிய தொழில்நுட்பம் அறிமுகம், ஒரு வழிப் பாதை எனப் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதால் அதிகப்படியான விபத்துகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை கண்டறிந்த போக்குவரத்து போலீசார் தினந்தோறும் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர்.
சென்னை போக்குவரத்து காவல்துறை கட்டுப்பாட்டின்கீழ் 55 போக்குவரத்து காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. போக்குவரத்து விதிமீறல்களைக் கண்காணிக்க அந்தந்த போக்குவரத்து காவல் நிலையங்களுக்கு உட்பட்டு 55 குழுக்களாகப் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர்.
நாளொன்றுக்கு 40 முதல் 50 வழக்குகள் பதிவு செய்யப்படுவதாகவும், சென்னை நகர் முழுவதும் 200க்கும் மேற்பட்ட இடங்களில் வாகன தணிக்கை செய்யப்பட்டு 7000 வழக்குகள் வரை பதிவு செய்யப்படுவதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் ஏ.என்.பி.ஆர் கேமராக்கள் மூலமாக 3ஆயிரம் வழக்குகளும், சட்டம் ஒழுங்கு போலீசாரால் 3 ஆயிரம் வழக்குகளும் பதிவு செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் இந்தாண்டு ஜனவரி முதல் ஜூலை 15ஆம் தேதி வரை போக்குவரத்து விதிகளை மீறியதாக 60 கோடி ரூபாய்க்கு மேல் அபராதத் தொகை வசூல் செய்துள்ளதாக போக்குவரத்து காவல்துறை தரப்பில் அதிர்ச்சியளிக்கும் புள்ளிவிவரங்களைத் தெரிவித்துள்ளது. ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை ஓட்டியதாக 3.5 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 36 கோடி ரூபாய் அபராதம் வசூல் செய்துள்ளதாகவும், மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 19 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 19.7 கோடி ரூபாய் அபராதம் செய்துள்ளதாகவும், இவ்வாறாக போக்குவத்து காவல் துறைக்கு 60 கோடி ரூபாய்க்கு மேல் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் அளித்துள்ளது.