சென்னை:போரூர், சமயபுரம் நகரை சேர்ந்தவர் நடிகை ஜெயதேவி. 1980களில் வெளியான 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகியாகவும், முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் "பாவத்தின் சம்பளம்", நடிகர் கமல்ஹாசனின் "இதயமலர்" உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 30-க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்தும், இயக்கியும் உள்ளார்.
இந்நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஜெயதேவி அளித்த புகாரில் கூறியிருப்பதாவது, "கடந்த 2005-ஆம் ஆண்டு 6 கோடி ரூபாய் செலவில், பின்னணி பாடகர் ஹரி ஹரணை கதாநாயகனாகவும், நடிகை குஷ்புவை கதாநாயகியாகவும் வைத்து "பவர் ஆப் உமன்" என்ற படத்தை தயாரித்ததாக கூறியுள்ளார்.
படத்தின் பணிகள் முடிவடையாததால் தற்போது வரை அப்படம் வெளியாகாத நிலையில் உள்ளதாகவும், படத்தை முடிக்க ஒரு கோடி ரூபாய் கடன் தேவைப்பட்டதாகவும் ஜெயதேவி தெரிவித்துள்ளார். மேலும் நண்பர்கள் சரவணன், சுந்தர் ஆகியோர் மூலம் ஊட்டியை சேர்ந்த திரைப்பட பைனான்சியர் ரகு என்பவர் அறிமுகமானதாகவும், ஜெயம் ரவி, விஜய் சேதுபதி ஆகியோரை வைத்து 100 கோடி ரூபாய் செலவில் "லாட்டரி எனும் நான்" என்ற படத்தை தயாரிப்பதாக ரகு தெரிவித்ததாகவும் ஜெயதேவி குறிப்பிட்டுள்ளார்.