தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விநாயகர் சிலைகள் கரைப்பதை கண்காணிக்க குழு - தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு! - மாசு கட்டுப்பாட்டு

விநாயகர் சதூர்த்தியின்போது ஆறு மற்றும் கடல்களில் கரைக்கப்படும் சிலைகள் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதல்படி கரைக்கப்படுகின்றனவா என்பதை கண்காணிக்க குழு ஒன்றை அமைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 12, 2023, 10:30 PM IST

சென்னை:விநாயகர் சதுர்த்தியின்போது மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதல்படி சிலைகள் முறையாக கரைக்கப்படுகிறதா என கண்காணிக்க தமிழ்நாடு வனம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை துறை செயலாளர் தலைமையில் குழு ஒன்றை அமைத்து தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது.

சென்னையில் உள்ள தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், சென்னையைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவர், நீர்நிலைகளில் மாசு ஏற்படாமல் பாதுகாக்க, விநாயகர் சதுர்த்தி போன்ற விழாக்களில் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதை தடை செய்து, மாற்றாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதலை பின்பற்றி சிலைகளை கரைப்பதற்கு ஏதுவாக செயற்கையான நீர் நிலையை ஏற்படுத்த வேண்டும் என மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில், இந்த மனு தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்யநாராயணன் மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபல் முன்னிலையில் இன்று (செப்.12) விசாரணைக்கு வந்தது. அப்போது, செயற்கை நீர்நிலைகளில் சிலைகளை கரைப்பதால் ஏற்படும் கழிவுகளை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகமே சுத்தம் செய்ய வேண்டி உள்ளதாக வாதாடிய அரசு தரப்பு வழக்கறிஞர், தனிப்பட்ட முறையில் வீடுகளில் சிலைகளை வைத்து வழிபடுபவர்கள் சிலைகளை கரைப்பதற்கு எடுத்துச் செல்லப்படும் மையத்தில் கொடுப்பதாகவும் தெரிவித்தார்.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத சிலைகளை தங்களது வீடுகளிலேயே கரைத்து அதனை தோட்டத்திற்கு பயன்படுத்தும் நல்ல செயல் முறைகளை பலர் பின்பற்றி வருவதை தீர்ப்பாயம் சுட்டிக்காட்டியது. ஆறு, ஏரி, குளம், கடல் மற்றும் வீடுகளில் சிலைகளை கரைப்பதற்கு மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் கொடுத்துள்ள வழிகாட்டுதலை முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்ட நிலையில், முறையான வழிகாட்டுதல் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட தீர்ப்பாயம், கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதனை கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய, தமிழ்நாடு சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை செயலாளர் தலைமையில், பொதுத்துறை செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது.

மேலும், சூழலியலுக்கு முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நிலங்கள், ஆறுகள், முகத்துவாரங்கள், ஏரிகள் போன்றவற்றில் சிலைகள் கரைக்கப்படுவதை தவிர்க்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு, வழக்கை வரும் செப்டம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க:தமிழகத்திற்கு 5000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும்: கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை!

ABOUT THE AUTHOR

...view details