தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கள்ளச்சாராய இறப்புகள் - விழுப்புரம் எஸ்.பி. சஸ்பெண்ட்!

விழுப்புரம் அருகே கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட மதுவிலக்குப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்கள் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கள்ளச்சாராய
stalin

By

Published : May 15, 2023, 5:54 PM IST

Updated : May 15, 2023, 6:33 PM IST

சென்னை: விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே செட்டியார் குப்பத்தில் நிகழ்ந்த கள்ளச்சாராய இறப்புகள் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் இன்று(மே.15) முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்குச் சென்று, அங்கு சிகிச்சைப் பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் இச்சம்பவம் தொடர்பாக நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர், மாவட்ட காவல்துறையும், அதன் முக்கிய அங்கமான மதுவிலக்கு அமலாக்கப் பிரிவும், கள்ளச்சாராய ஒழிப்புப் பணியில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்றும், இதில் எவ்விதமான சமரசத்திற்கும் இடம் அளிக்கக் கூடாது என்றும் கடுமையாக எச்சரித்தார்.

செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கடந்த சில மாதங்களில் இந்தப் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் ஆய்வு செய்தார். கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் எத்தனால் போன்ற ரசாயனங்கள் தவறாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றை மிகத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பணியாற்றும் காவலர்கள் தீவிர கவனத்துடனும் அக்கறையுடன் செயல்பட வேண்டும் என்றும், அவ்வாறு இல்லாத காவலர்கள் மீது உயர் அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நிகழ்ந்த இந்த துயரமான சம்பவங்களுக்கு காரணமான குற்றவாளிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதே சமயம் நிர்வாக ரீதியாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட மதுவிலக்கு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்கள் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார்கள் என்றும் தெரிவித்தார். செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணியிட மாற்றம் செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.

இந்தப் பிரச்சனையின் மூல காரணங்களைக் கண்டறிந்து அவற்றை முற்றிலுமாக ஒழிக்க ஏதுவாகவும், தொழிற்சாலைகளில் பயன்படுத்தக்கூடிய சில மூலப்பொருட்கள் கள்ளச் சாராயம் தயாரிக்கப்படும் நிகழ்வுகளில் பயன்படுத்தப்படுவதை முழுமையாக தடுத்திடும் நோக்கத்துடனும், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நடந்த கள்ளச்சாராய சம்பவம் குறித்த வழக்குகளின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்படுகிறது என்றும் தெரிவித்தார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா, காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களது குடும்பத்தாருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி!

Last Updated : May 15, 2023, 6:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details