தமிழ்நாட்டில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கு பெருமளவு எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், இது தொடர்பாக ஆய்வுசெய்ய பள்ளிக் கல்வித் துறை, உயர் கல்வித் துறை சார்பில் தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டன.
இதற்கிடையில், இன்று 15 பல்கலைகழகங்கள் சார்பில், புதிய கல்விக் கொள்கை குறித்த மாணவர்கள், பெற்றோர்களின் கருத்துகள் ஆன்லைன் மூலம் கேட்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தேசிய கல்விக் கொள்கையும் உயர் கல்வியும் என்ற தலைப்பில் விழுப்புரம் எம்பி ரவிக்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கைக்கான எதிர்ப்பு பெரும்பாலும் மும்மொழித் திட்டத்தின் அடிப்படையிலேயே முன்வைக்கப்பட்டுவருகிறது. பள்ளிக் கல்வி என்ற நிலையில் அதிகம் கவனம் செலுத்தப்படுகிறது. தேசிய கல்விக் கொள்கை உயர் கல்வியில் செய்யவிருக்கும் மாற்றத்தைப் பற்றி அதிகம் இங்கே பேசப்படவில்லை.
உயர் கல்வியில் GER (Gross Enrolment Ratio) எனப்படும் மொத்த சேர்க்கை விகிதத்தை 2035ஆம் ஆண்டுக்குள் 50 விழுக்காடாக உயர்த்துவது என்று தேசிய கல்விக் கொள்கையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை ஏற்கனவே தமிழ்நாட்டில் எட்டிவிட்டோம் என்று நாம் பேசிவருகிறோம்.
இந்தியாவில் உயர் கல்வியில் சேர்க்கை விகிதம் அதிகரிக்காததற்கு முதன்மையாக இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, பள்ளிக் கல்வியை முடிப்பவர்களின் எண்ணிக்கை இங்கே குறைவாக உள்ளது. இரண்டு, உயர்கல்வி முடித்தால் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற உத்தரவாதம் இங்கு குறைவாக உள்ளது.
வறுமை காரணமாக பள்ளிக் கல்வியை முடிப்பதற்கு முன்பே வேலை தேடவேண்டிய நிர்பந்தம் இங்கே பலருக்கும் இருக்கிறது. 2017-18இல் வெளியான நேஷனல் சேம்பிள் சர்வே நிறுவனத்தின் (NSSO) புள்ளிவிவரப்படி 15 முதல் 19 வரையிலான வயதுகொண்டவர்கள் வேலைக்குப்போக ஆரம்பித்துவிடுகின்றனர்.
அந்த வயதிலான மக்கள்தொகையில் 15.6 விழுக்காட்டினர் வேலைக்குப் போகிறவர்களாகவும் வேலை தேடுகிறவர்களாகவும் உள்ளனர் என்பது மற்றொரு புள்ளி விவரம் மூலம் தெரியவந்துள்ளது.
எனவே, இடைநிற்றலின்றி பள்ளிக் கல்வியை முடிப்போரின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வதற்கு வறுமை ஒழிப்புத் திட்டங்களோடு இணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஆனால், தேசிய கல்விக்கொள்கையில் பள்ளிக் கல்வியில் இடைநிற்றலை அதிகரிக்கச் செய்வதற்கான ஏற்பாடுகளே அதிகம் உள்ளன. பள்ளிக் கல்வியை முடித்து உயர் கல்வி பெறுகிறவர்கள் எந்த அளவுக்கு வேலைவாய்ப்பைப் பெறுகிறார்கள் என்று பார்க்க வேண்டும்.
மேலும், இளநிலை பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களில் 8.9 விழுக்காட்டினரும், முதுநிலைப் படிப்பு (post graduate) முடித்தவர்கள் 8.7 விழுக்காட்டினரும் 2004-2005ஆம் ஆண்டுகளில் வேலை இல்லாதவர்களாக இருந்தனர்.
2011-12ஆம் ஆண்டுகளில் இதில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது. வேலைவாய்ப்பு அதிகரித்தது. அப்போது பட்டப்படிப்பு முடித்தவர்களில் 7.6 விழுக்காட்டினர், முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் 7.5 விழுக்காட்டினர் வேலை இல்லாமல் இருந்தனர். ஆனால் பாஜக ஆட்சி வந்ததற்குப் பிறகு பொருளாதாரத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி வேலையின்மையை அதிகரிக்கச்செய்தது.
2017-18ஆம் ஆண்டில் பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களில் 17.2 விழுக்காட்டினர், முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவர்களில் 14.6 விழுக்காட்டினர் வேலை இல்லாமல் இருந்தனர். கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இது இன்னும் பல மடங்கு உயர்ந்து இருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
குடிபெயர்ந்த தொழிலாளர்களில் மட்டுமே சுமார் ஒரு கோடி பேர் வேலை இழந்துள்ளனர். தனியார் துறைகளில் வேலைபார்த்தவர்கள் சுமார் 60 லட்சம் பேருக்கு மேல் வேலை இழந்துள்ளனர்.
இந்நிலையில், உயர் கல்வியை விரிவுப்படுத்துவதற்காகப் புதிதாக ஏராளமான பல்கலைக்கழகங்களையும், கல்லூரிகளையும் ஆரம்பிக்கப் போகிறோம் எனவும், உள்நாட்டு மொத்த உற்பத்தியில் ஆறு விழுக்காடு கல்விக்காக ஒதுக்கப் போகிறோம் என்றெல்லாம் தேசிய கல்விக் கொள்கையில் பேசப்படுகிறது.
இப்போது இருக்கும் பொருளாதார நிலைக்கும் தேசிய கல்விக் கொள்கையில் சொல்லப்பட்டு இருக்கும் வாக்குறுதிகளுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. ஏற்கனவே வேலையின்மை கோரத்தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கும் நிலையில் தேசிய கல்விக் கொள்கையில் உயர் கல்வி பற்றி பேசப்படும் விஷயங்கள் எல்லாமே பகல் கனவுகளாகவே இருக்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தேசிய கல்விக் கொள்கை - உயர் கல்வித்துறை சார்பில் கருத்துக்கேட்பு கூட்டம்