சென்னை:விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஆதரவற்றோர் ஆசிரமம் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்த ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டிருந்த ஆதரவற்றோர்கள் காணாமல் போனதாகவும், அங்கு இருந்த பலருக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது. பின்னர் இது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கு, சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ள ஆதரவற்றோர் ஆசிரம நிர்வாகிகளான ஜுபின் பேபி மற்றும் அவரது மனைவி மரியா உள்பட 7 பேர், தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவில், “மனநலம் பாதித்து சாலைகளில் திரிவோரை காவல் துறையினர் உதவி உடன் மீட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம்.
கடந்த 25 ஆண்டுகளாக இந்த இல்லத்தை நடத்தி வரும் எங்களுக்கு எதிராகப் பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து உரிமங்களும், சான்றுகளும் பெற்று இல்லத்தை நடத்தி வருகிறோம். ஆசிரமத்தில் பலருக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தவறானது. காவல் துறையினரின் நிர்பந்தம் காரணமாக, அந்தப் பெண் புகார் அளித்துள்ளார். மாநில மனநல ஆணையத்திடம், இல்லத்துக்கு ஒப்புதல் கோரி அளித்த விண்ணப்பம் தற்போது நிலுவையில் உள்ளது.