சென்னை: தமிழ்நாடு முழுவதும் அக்டோபர் 2ஆம் தேதி நடைபெறவிருந்த கிராம சபை கூட்டம் கரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழ்நாடு அரசால் ரத்து செய்யப்பட்டது. கிராம சபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்த்து தெரிவித்து வருகின்ற நிலையில், ரத்து செய்யப்பட்ட கிராம சபை கூட்டங்களை உடனடியாக நடத்த அறப்போர் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள் வலியுறுத்தி வந்தன.
கிராம சபை குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துதல், தலைமைச் செயலருக்கு கடிதம் எழுதுதல், முதலமைச்சரின் தனிப்பிரிவு மூலம் முறையிடம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளும் விதமாக கிராம சபை மீட்பு வாரத்தை நடத்த அறப்போர் இயக்கம் திட்டமிட்டது. மூத்த காந்தியவாதியும், சமூக ஆர்வலருமான கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், சுதந்திர போராட்ட வீரரான கொடிக்கால் ஷேக் அப்துல்லா, சித்திலிங்கி கிராம ஊராட்சி தலைவர் மாதேஸ்வரி மஞ்சுநாதன் ஆகியோர் இணைந்து இன்று கிராம சபை மீட்பு வாரத்தை தொடங்கி வைத்தனர்.