தமிழ்நாடு முழுவதும் அக்டோபர் 2-ஆம் தேதி முதல் கிராம சபை கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. இருப்பினும் கரோனா பரவல் காரணமாக கிராம சபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.
கிராம சபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ரத்து செய்யப்பட்ட கிராம சபை கூட்டங்களில் உடனடியாக மீண்டும் நடத்த வலியுறுத்தி அறப்போர் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள் இணைந்து கிராம சபை மீட்பு வாரத்தை இன்று முதல் 17ஆம் தேதிவரை நடத்துகின்றனர்.
இதில் கிராம சபை பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துதல், தலைமைச் செயலருக்குக் கடிதம் எழுதுதல், முதலமைச்சரின் தனிப்பிரிவு (CM CELL) மூலம் முறையிடல், மரக்கன்று நடுதல் உள்ளிட்ட பல விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதன் தொடக்க விழா இன்று காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மூத்த காந்தியவாதியும் சமூக ஆர்வலருமான கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், சுதந்திர போராட்ட வீரரான கொடிக்கால்' ஷேக் அப்துல்லா, சித்திலிங்கி கிராம ஊராட்சி தலைவர் மாதேஸ்வரி மஞ்சுநாதன் ஆகியோர் இணைந்து தொடக்கி வைக்க உள்ளனர்.