சென்னை:கரோனா தொற்றின் காரணமாக நடத்தப்படாமல் இருந்த கிராமசபைக் கூட்டம் தமிழ்நாட்டில் இன்று (ஏப்.24) நடத்தப்பட்டது. 'பஞ்சாயத்து ராஜ்' தினத்தை முன்னிட்டு 24ஆம் தேதி சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. சிறப்பு கிராமசபைக்கூட்டம் நடத்துவது குறித்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்.
அதில், “பஞ்சாயத்து ராஜ் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக ஊரக வளர்ச்சி மற்றும் நீடித்த வளர்ச்சி இலக்கு என்ற தலைப்பில் சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடத்த வேண்டும். கூட்டத்தில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து விவாதித்து, உறுதிமொழி ஏற்கவேண்டும். கிராம சபைக்கூட்டம் நடத்தப்படுவதை அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் உறுதி செய்யவேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், கரோனா பரவல் காரணமாக கிராமசபைக் கூட்டங்கள் தள்ளிவைக்கப்பட்டிருந்தன. தற்போது கரோனா பாதிப்பு குறைந்த நிலையில், பஞ்சாயத்து ராஜ் தினத்தன்று சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்த பிறகு நடக்கும் முதல் கிராமசபைக் கூட்டம் இது.