சென்னை தலைமைச் செயலகத்தில் நிதித்துறை கூடுதல் செயலாளர் கிருஷ்ணனை, வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'ஊரடங்கு காரணமாக மாநகராட்சி, நகராட்சிப்பகுதிகளில் ஏப்ரல், மே மாதம் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு மாத வாடகை ரத்து செய்யப்பட வேண்டும். அடுத்து ஒரு ஆண்டிற்கு 50 விழுக்காடு அளவிற்கு மட்டுமே வாடகை வசூலிக்க அரசு வழிவகை செய்ய வேண்டும்.
கோயம்பேடு சந்தை அடைக்கப்பட்டதால், நாள்தோறும் ஆயிரம் டன் காய்கறிகள் தினமும் வீணாகின்றன. அதனால், உடனடியாக கோயம்பேடு சந்தையைத் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்க வேண்டும். பேருந்துகள் இயக்கம் காரணமாக பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த காய்கறிக் கடைகள் வேறு இடத்துக்கு மாற்றப்படாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. கூடிய விரைவில் பழைய முறையில் சந்தைகளை அமைத்து, காய்கறிகளை விற்க அரசு வழிவகை செய்யவேண்டும்.