நிலவை ஆராய்வதற்காக சந்திரயான் - 2 விண்கலத்தை, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இஸ்ரோ விண்ணில் ஏவியது. ஆனால், நிலவில் தரையிறங்கும் கடைசி நிமிடத்தில் விண்கலம் நிலவில் விழுந்தது. இதையடுத்து விண்கலம் நிலவின் எந்த இடத்தில் விழுந்தது, அது செயலில் இருக்கிறதா என்று நாசாவும் இஸ்ரோவும் ஆராய்ந்து வந்த நிலையில், நாசா சந்திரயான் - 2 விண்கலத்தை கண்டுபிடித்துள்ளது.
இதனை நாசா கண்டுபிடித்தாலும், சென்னையைச் சேர்ந்த பொறியாளர் சண்முக சுப்ரமணியன் கொடுத்த ஆலோசனை தான், விண்கலம் எங்கே உள்ளதென கண்டுபிடிக்க முடிந்ததாக நாசா பாராட்டியுள்ளது. சண்முக சுப்ரமணியனைப் பாராட்டி, நாசா அவருக்கு அனுப்பிய இ -மெயிலை, தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்ததிலிருந்து, பல்வேறு தரப்பினரும் அவரைப் பாராட்டு மழையில் நனைத்துள்ளனர். நாசாவுக்கே ஆலோசனை வழங்கிய சண்முக சுப்ரமணியனுக்கு, நாசா மற்றும் இஸ்ரோ வேலை கொடுக்க வேண்டும் என்று இணையதளவாசிகள் கூறி வருகின்றனர்.
இது குறித்து சண்முக சுப்ரமணியம் கூறுகையில், '' சிறுவயது முதல் ராக்கெட் தொடர்பான விஷயங்களில் எனக்கு ஆர்வம் அதிகம். அந்த ஊக்கம் தான் விண்கலம் எங்கு உள்ளதென கண்டுபிடிக்க உதவியது. இதைக் கண்டுபிடிக்க சிறப்புக் கருவிகள் எதையும் நான் பயன்படுத்தவில்லை. சில மாதங்களுக்கு முன் நாசா, நிலவின் பழைய புகைப்படத்தையும் சமீபத்தில் எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டு விக்ரம் லேண்டர் எங்கு உள்ளதென கண்டுபிடியுங்கள் என்று பதிவிட்டிருந்தது. அதன்படி, இரு புகைப்படங்களையும் வைத்து ஒவ்வொரு பகுதியாக ஆராய்ந்து பார்த்தேன்.