சென்னை: இந்தியாவின் முன்னணி காட்சிக்கலைப் படப்பிடிப்புக் கூடங்களில் (VFX Studios) ஒன்றான பாண்டம் டிஜிட்டல் எபெக்ட்ஸ் லிமிடெட் (PhantomFX) நிறுவனம், உலகம் முழுவதும் பல திரைப்படங்களுக்கும், இணையத் தொடர்களுக்கும், விளம்பரங்களுக்கும் பிரமிக்க வைக்கும் தத்ரூபமான காட்சி விருந்துகளை உருவாக்கித் தந்திருக்கிறது.
இப்போது இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உயரிய தரத்திலான டிஜிட்டல் அரங்குகளை (Digital Studios) 40 கோடி ரூபாய் முதலீட்டில் அமைப்பதற்கான மகத்தான விரிவாக்கத்திற்கு PhantomFX நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.
இதுகுறித்து PhantomFX நிறுவனரும் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அலுவலருமான பிஜோய் அற்புதராஜ் கூறுகையில் "நம்பகமான நெட்வொர்க் கூட்டாளி (Trusted Partner Network - TPN) என்று சான்று அளிக்கப்பட்டிருக்கும் PhantomFX நிறுவனம் அடுத்த சில ஆண்டுகளில் இந்தத் துறையில் உலகத்தில் தலையாய இடத்தைப் பிடிப்பதற்காக, உயரிய தரத்துடன் டிஜிட்டல் ஸ்டுடியோக்களை உருவாக்கி தனது சிறகுகளைப் பரப்ப இருக்கிறது.
VFX, அனிமேஷன் பிரிவுகள் மிகவும் விரைவாக வளர்ந்துவரும் துறைகள். எதிர்காலத்தில் மிக பிரம்மாண்டமன அளவில் வளர்ந்து வரக்கூடிய ஆற்றல் படைத்த தொழில்களாக இவை இருக்கும். இத்தகைய சூழ்நிலையை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு உலகிலேயே முதன்மையான VFX நிறுவனமாக தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கு PhantomFX நிறுவனம் ஆயத்தப்படுத்தி கொண்டு வருகிறது.
கொச்சி, ஹைதராபாத் ஆகிய இடங்களில் உயர் தரமான டிஜிட்டல் ஸ்டுடியோக்களை அமைக்கவும், ஏற்கனவே இருந்துவரும் சென்னை, மும்பை ஸ்டுடியோக்கள், இரண்டாம் அடுக்கு நகரங்களான கோயம்புத்தூர், மதுரை ஸ்டுடியோக்களையும் மிகப்பெரிய அளவில் விரிவாக்கவும் இந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.
உலகத்தரத்துடன் கூடிய டிஜிட்டல் ஸ்டுடியோக்களை கனடாவில் உள்ள வான்கோவரிலும், மான்ட்டிரியாவிலும், அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்சிலும், இங்கிலாந்து மற்றும் துபாய் ஆகிய நாடுகளிலும் அமைப்பதற்கான திட்டங்கள் செயல்பாட்டில் இருக்கின்றன.
இவை தவிர சாத்தியமுள்ள மற்ற வெளிநாட்டுச் சந்தைகளை நாடுவதற்கும் பேராவல் கொண்டுள்ள நாங்கள், 10 இலட்சம் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய இருக்கிறோம். சென்னையிலும் மும்பையிலும் தற்போது 25,000 சதுர அடி பரப்பில் அமைந்திருக்கும் ஸ்டுடியோக்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஒரு இலட்சம் சதுர அடி பரப்பளவு கொண்டதாக விரிவாக்கம் செய்யப்படும்.
PhantomFX தன்னுடைய எல்லைகளை விரிவாக்கம் செய்யும்போது திறமையான இந்திய இளைஞர்களுக்கு VFX தொழிலில் வேலைவாய்ப்புகள் பெருமளவில் உருவாகும். மூன்று ஆண்டுகளுக்குள் 2000க்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகும்.
VFX பிரிவில் திறமையுள்ளவர்களை உருவாக்கி வரும் இந்தியாவின் பல்கலைக்கழகங்களுடனும், மற்ற கல்வி நிறுவனங்களுடனும் இணைந்து வேலை நியமனங்கள் வழங்கப்படும்” என தெரிவித்தார்.
தொடர்ந்து PhantomFX நிறுவனத்தின் இயக்குநரும் முதன்மைச் செயல்வினை அலுவலருமான பினு ஜோஷ்வா கூறுகையில், “திரைப்படங்கள், இணையத் தொடர்கள், விளம்பரங்கள் ஆகியவற்றின் தயாரிப்பு, தயாரிப்புக்கு முந்தைய, தயாரிப்புக்குப் பிந்தைய பணிகள் ஆகியவற்றை தற்போது இந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
உள்நாட்டு, பன்னாட்டுத் தயாரிப்புப் பணிகளில் PhantomFX நிறுவனம் பங்கேற்று அவற்றைப் பெருமளவில் வெற்றி பெறச் செய்திருக்கிறது. விஜய் நடித்த பீஸ்ட், கமல்ஹாசனின் விக்ரம், ராஜமௌலியின் வீர காவிய அதிரடித் திரைப்படமான ஆர்ஆர்ஆர், சூர்யாவின் ஜெய்பீம் போன்ற இந்தியாவின் வெற்றிப்படங்கள் பலவற்றிற்கு VFX காட்சிக்கலையை இந்த நிறுவனம் உருவாக்கியிருக்கிறது.