துபாய்:தேமுதிக நிறுவனத் தலைவரும் பொதுச்செயலாளருமான விஜயகாந்துக்கு 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின்போதுஉடல்நலக் குறைவு ஏற்பட்டது. அப்போது சிங்கப்பூர் சென்று தற்காலிக மருத்துவம் எடுத்த பின் தேர்தல் வேலைகளை கவனித்தார்.
இருப்பினும் தேர்தல் முடிந்தவுடன் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததால் சென்னையில் மருத்துவம் எடுத்துக்கொண்டு முழுமையான மருத்துவத்திற்காக சிங்கப்பூரில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார்.
இந்த மருத்துவத்திற்குப் பிறகு அவரது குரல் பாதிக்கப்பட்டது. தைராய்டு பிரச்சினை, தொண்டையில் தொற்று, சிறுநீரகப் பிரச்சினை ஆகிய பாதிப்புகளால் உடல்நிலை மோசமடைந்தது. 2017 முதல் 2018ஆம் ஆண்டுவரை சென்னையில் 10 நாள்கள், பின்பு சிங்கப்பூர், அமெரிக்கா எனப் பல இடங்களில் மருத்துவம் மேற்கொண்டார்.
மகனுடன் பயணம்
இதையடுத்து, அவர் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி மருத்துவ சிகிச்சைக்காக துபாய் புறப்பட்டுச் சென்றார். அவருடன் அவரது இளைய மகன் சண்முக பாண்டியன், அவரது உதவியாளர்கள் குமார், சோமு ஆகியோரும் சென்றனர்.
சகோதரிகளுடன் சத்ரியன்
இந்நிலையில் விஜயகாந்த், துபாயில் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் உடன் அவர் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, "நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன். நான் நடித்த 'சத்ரியன்' திரைப்படத்தை, எனது சிகிச்சைக்கு உதவிபுரியும் செவிலியர் சகோதரிகளுடன் பார்த்தபோது எடுத்த படம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தேமுதிக பொருளாரும், விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா, விஜய்காந்தை உடனிருந்து கவனிக்க துபாய் செல்ல இருந்தார். அவரின் பாஸ்போர்ட் மீது இருந்த சிக்கல், தற்போது சரி செய்யப்பட்டதால் பிரேமலதாவும் விரைவில் துபாய் போக இருக்கிறார்.
இதையும் படிங்க: அன்பின் ஒட்டுமொத்த உருவம் அன்னை தெரசா!