தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாரம்பரிய மருத்துவர்களை கலந்தாலோசிக்க வேண்டும் - தேமுதிக தலைவர் விஜயகாந்த் - தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த்

சென்னை: பாரம்பரிய மருத்துவர்களைக் கலந்தாலோசித்து அதன்படி, தமிழ்நாட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டுமென தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

விஜயகாந்த்
விஜயகாந்த்

By

Published : Apr 30, 2020, 8:01 PM IST

கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர நாடு முழுவதுமுள்ள மருத்துவர்கள் முதல்நிலை வீரர்களாக செயல்பட்டு பெரும் பங்காற்றி வருகின்றனர். அலோபதி மட்டுமின்றி, ஹோமியோபதி, சித்த மருத்துவம், ஆயுர்வேதம் என மாற்று மருத்துவ முறைகளிலும் கரோனா குறித்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பாரம்பரிய மருத்துவர்களையும் கலந்தாலோசிக்கக் கோரி தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சீனாவில் தொடங்கிய கரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. பல உயிர்களை பலி வாங்கியுள்ள இந்த தொற்றுக்கு, இதுவரை மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. மேலும் தமிழ்நாடு முழுவதும், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நாளுக்கு நாள் நோய் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது.

எனவே கரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க, நமது பாரம்பரிய மருத்துவ முறையான ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதம், யுனானி போன்றவற்றை நாம் நிச்சயமாக கவனத்தில் கொள்ளவேண்டும். டாக்டர் தணிகாச்சலம் போன்றவர்கள் தொடர்ந்து இதை வலியுறுத்தி வரும் வேளையில், “சிறு துரும்பும் பல் குத்த உதவும்” என்கின்ற பழமொழிக்கு ஏற்ப, இந்த காலக்கட்டத்தில் நாம் எதையும் அலட்சியமாகக் கருதாமல், ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதம், யுனானி மருத்துவர்களையும் கலந்தாலோசித்து அவர்கள் கூறும் சிகிச்சை முறைகளைக் கேட்டறிந்து பின்பற்றலாம்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு முதலில் 15 நாட்களுக்கு சிகிச்சை அளித்து, நாம் பரிசோதிக்கலாம். ஒருவேளை அதில் பலன் இருந்தால், அந்த சிகிச்சை முறையைத் தொடரலாம். இதன் மூலம், தமிழர்களின் பாரம்பரியமான சிகிச்சை முறையை உலகிற்கும் நாம் கொண்டு செல்ல முடியும்.

கபசுரக் குடிநீர், நிலவேம்புக் கசாயம், வேப்பிலை, மஞ்சள், சுடு தண்ணீர், உப்பு, இவையனைத்தும் தொற்றிலிருந்து காப்பாற்றும் என்பது நம்பிக்கை. குஜராத் மாநிலத்தில் பாரம்பரிய மருத்துவ சிகிச்சை மூலம் நல்ல பலன் கிடைத்துள்ளது என்று தெரியவந்துள்ளது. எனவே, பாரம்பரிய மருத்துவர்களை கலந்தாலோசித்து, தமிழ்நாட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கு அந்த மருத்துவ சிகிச்சை முறைகளை அளிக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:'மாஸ்க் அணிந்து சமூக வலைத்தளங்களில் டிபியாக வையுங்கள்' - விஜயகாந்த்

ABOUT THE AUTHOR

...view details