சென்னை: மதுரை கோச்சடை பகுதியில் ஜூடோ விரர் விக்னேஸ்வரன் மாலையில் வீடு திரும்பும்போது அப்பகுதியில் பழைய மின் கம்பங்களை அகற்றும் பணிகளை மின்வாரிய அதிகாரிகள் கிரேன் மூலம் மேற்கொண்டிருந்தனர். மின் கம்பம் கட்டப்பட்டிருந்த கம்பி வலுவில்லாமல் இருந்ததால் அது அறுந்து அதன் கம்பம் விக்னேஸின் காலில் விழுந்துள்ளது.
உடனடியாக, அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தில் அவரது இடது கணுக்கால் பகுதி முழுமையாக நொறுங்கியதால், அவருடைய கணுக்கால் பகுதி அகற்றப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், மின்வாரியத்தின் அலட்சியத்தால கால் இழந்ததாக ஜூடோ வீரர் விக்னேஸ்வரனுக்கு அரசு வேலையும், உரிய நிவாரணமும் வழங்க வேண்டி தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்த் நேற்று (ஜூலை 28) அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும் இது தொடர்பாக தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோச்சடை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவரான விக்னேஸ்வரன் பல்வேறு ஜூடோ போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்றுள்ளார். அடுத்த மாதம் மாநில அளவில் நடைபெறும் ஜூடோ போட்டியில் கலந்து கொள்வதற்காக பயிற்சி மேற்கொண்டு வந்த நிலையில், கோச்சடை பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த விக்னேஸ்வரன் மீது மின்கம்பம் திடீரென விழுந்ததில் மாணவனின் இடது கணுக்கால் முறிந்தது.