சென்னை:தமிழ் சினிமாவில் பிரபல நடிகரும், தேமுதிக பொதுச்செயலாளருமான விஜயகாந்த் கடந்த சில வருடங்களாகவே உடல்நலப் பிரச்சனைகளால் பாதிக்கபட்டிருந்தார். இதனால் பொது நிகழ்ச்சி, கட்சிப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பது என அனைத்து நிகழ்வுகளையும் அவர் தவிர்த்து வந்தார்.
இந்நிலையில் சளி, இருமல் மற்றும் தொண்டை வலி காரணமாக மருத்துவ பரிசோதனைக்காக கடந்த 18ஆம் தேதி சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது விஜயகாந்தை பரிசோதித்த மருத்துவர்கள் சளி மற்றும் இருமல் அதிகமாக இருப்பதால் ஒரு சில தினங்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்தினர்.
இதனை தொடர்ந்து கடந்த நவ 23ஆம் தேதி மியாட் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் உடல்நிலை நன்றாக இருப்பதாகவும், சிகிச்சைக்கு நன்றாக ஒத்துழைப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டது. மேலும் அவர் விரைவில் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார் என நம்பிக்கை தெரிவித்தனர்.
இந்நிலையில், இன்று மதியம் மியாட் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், ”விஜயகாந்த் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. எனினும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது” என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒரே மாதிரி கல்வி நிறுவனத்தின் பெயரை வைப்பதற்கு அகில இந்திய தொழில்நுட்பக் கழகம் கிடுக்குபிடி!