தமிழ்நாடு சட்டப்பேரவையின் கடந்த கூட்டத்தொடரில் பேசிய எம்.எல்.ஏ விஜயதாரணி, “ராஜிவ் காந்தி கொல்லப்பட்டபோது அப்பாவிகளும் உயிரிழந்தனர். அவர்களுக்கு அரசு என்ன உதவிகளை செய்தது. எனது தாய் உள்பட பலர் படுகாயமடைந்தார்” என்று பேசினார். அவரது பேச்சை அடுத்து ராஜிவ் படுகொலை சம்பவத்தால் விஜயதாரணியின் தாயும் பாதிக்கப்பட்டிருப்பது பரவலாக தெரிய ஆரம்பித்தது.
இந்திய வரலாற்றில் சில மறக்க முடியாத தேதிகள் உண்டு. அப்படிப்பட்ட தேதி மே.21. இந்தத் தேதி இந்தியாவிற்கு மிகப்பெரிய கருப்பு நாளாகவே அமைந்திருக்கிறது. மே.21 என்று கேட்டாலே பலரது உடல்கள் நடுங்கும், கோர சத்தங்கள் அவர்கள் செவியில் எழுந்து கண்களிலிருந்து தாரைத் தாரையாக கண்ணீர் ஊற்றும்.
ராஜிவ் காந்தி மரணம். ஒருவரின் உயிரை எடுப்பதற்கு, ஏராளமானோரின் உயிர்களை பலி வாங்கிய சம்பவம். அவரது மரணத்தை சுற்றி அவிழ்க்கப்படாத முடிச்சுகள் இன்றளவும் இருக்கின்றன. ராஜிவ் மரணம் ஏழு பேரோடு சுருங்கி நிற்கிறது.
ஆனால், அவர் மரணத்தில் இருக்கும் அரசியல் சாயத்தைத் துடைத்துவிட்டு பார்த்தால், 14 பேரின் உயிர்கள் தேவையில்லாமல் எடுக்கப்பட்டிருக்கிறது. அவர்களது குடும்ப நிலை தற்போது என்னவென்று யாருக்கும் தெரியவில்லை. 40க்கும் மேற்பட்டோர் தங்களது வாழ்க்கையை மிகுந்த காயங்களுக்கு இடையில் நகர்த்தி கொண்டிருக்கிறார்கள்.
இந்தத் துன்பியல் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட ஏறத்தாழ 40க்கும் மேற்பட்டோர் இந்திய சமூகத்தால் மறக்கப்பட்டிருக்கிறார்கள்.
அப்படி மறக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்டவர்களில் தற்போதைய காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணியின் தாயும் ஒருவர். ஆம், விஜயதாரணியின் தாய் பகவதி, காங்கிரஸில் தீவிரமாக களமாடியவர். அதுமட்டுமின்றி மருத்துவரும்கூட. ராஜிவ் கொலை நடந்த சமயத்தில், அந்த இடத்தில் இருந்தவர்.
குண்டு வெடிப்பில் ஏற்பட்ட படுகாயத்தால், கேட்கும் திறனை இழந்து, மனதை விட்டு அகலாத அந்தப் பயமும், பதற்றமும் அவரது கைகளை நடுங்கச் செய்து, மருத்துவத் துறையிலிருந்து அவரை வெளியேற்றியிருக்கிறது.
எப்படி இருக்கிறார் பகவதி, இந்த சம்பவம் அவரது வாழ்க்கையை எப்படி புரட்டி போட்டிருக்கிறது என்பது குறித்து அறிய அவருடைய மகளும், எம்.எல்.ஏவுமான விஜயதாரணியைச் சந்தித்தோம். விஜயதாரணியின் குரலில் இன்னமும் அந்த ரணம் ஆறாமல் இருக்கிறது.
மனதைத் தேற்றிக்கொண்டு பேச ஆரம்பித்தார் விஜயதாரணி, “நான் இதைப் பற்றி பெரிதாக எங்கேயும் பேசியது இல்லை. நம் கஷ்டம் நம்மோடு போகட்டும் என இருந்தேன். ஏன், இது கட்சியில்கூட பலரும் அறியாத விஷயம். என் தாயார் பகவதி பத்மநாபன் 1990களில் மகளிர் காங்கிரஸில் செயல்பட்டு வந்தவர்.