சென்னை அரசுப் பள்ளிகளில் விஜயதசமியில் மாணவர் சேர்க்கை சென்னை:தமிழ்நாட்டில் உள்ள தாெடக்கப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை வழக்கமாக விஜயதசமி நாளில் நடைபெறும். அதேபோல், நடப்பாண்டிலும் விஜயதசமி நாளில் மாணவர்கள் சேர்க்கை நடத்த வேண்டும் என தொடக்கக்கல்வித் துறை அறிவுறுத்தி இருந்தது. மேலும், மாணவர்கள் சேர்க்கையின் போது பள்ளிக் கல்வித்துறையின் மூலம் மாணவர்களுக்கு அளிக்கப்படும் நலத்திட்டங்களை எடுத்துக் கூற வேண்டும் எனவும் பள்ளிகளுக்கு அறிவுரை கூறியிருந்தது.
மேலும், அரசுப் பள்ளிகளில் இலவசக் கல்வி தரமாக அளிக்கப்படுவதை எடுத்துக் கூறி மாணவர்கள் சேர்க்கை நடத்த வேண்டும் எனவும் அரசுப் பள்ளியில் தகுதி மற்றும் திறமையான பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், தமிழ் மற்றும் ஆங்கில வழிக்கல்வி, எண்ணும் எழுத்தும் வகுப்பறை, விலையில்லா புத்தகம், நோட்டு, சீருடை, காலணிகள், புத்தகப்பை, கிரையான்ஸ், வண்ணப் பென்சில்கள் உள்ளிட்ட நலத்திட்டங்களும், காலை சிற்றுண்டி, மதிய உணவு வழங்கப்படுவதையும் எடுத்துக் கூறி மாணவர் சேர்க்கை நடத்த அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அந்த வகையில், சென்னை நந்தனம் மாதிரி அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை அஞ்சுகம், மாணவர்கள் சேர்க்கையை நடத்தினார். இதில், விஜயதசமி நாளில் தங்களின் குழந்தைகளுக்கு கல்வியை துவக்கி வைப்பதற்கு பெற்றோர்கள் ஆர்வத்துடன் வருகைப் புரிந்தனர். அவர்களை வரவேற்று, பள்ளியில் முதல் வகுப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சேர்க்கை நடத்தினர்.
மாணவர் சேர்க்கை குறித்து தலைமை ஆசிரியை அஞ்சுகம் கூறும்போது, “நந்தனம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் கடந்தாண்டை விட நடப்பாண்டில் 50 சதவீதம் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து உள்ளது. பள்ளியின் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் பள்ளிக்கு அருகில் உள்ள கோட்டூர்புரம், அகஸ்டின் நகர் போன்ற பகுதிகளில் ஆசிரியர்கள் நேரில் சென்று, மாணவர்களை பள்ளியில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட விழிப்புணர்களை ஏற்படுத்தினோம்.
மேலும் புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள காலை உணவு திட்டத்தால் மாணவர்கள் தொடர்ந்து வருகைப் புரிகின்றனர். இந்தப் பகுதியில், பெற்றாேர்கள் காலை உணவு தயாரிக்காமல் இருப்பதால் பள்ளிக்கு வர நேரம் ஆகி விட்டது எனக் கூறிய மாணவர்கள் தினமும் பள்ளிக்கு வருகின்றனர். மேலும், எண்ணும் எழுத்தும் திட்டத்தில் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுவது தெரிந்து, பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.
முதலாம் வகுப்பில் இன்று (அக்.24) சுமார் 15 குழந்தைகள் சேர்வார்கள் என எதிர்பார்க்கிறோம்” என தெரிவித்தார்.
மேலும், பள்ளியில் குழந்தையை சேர்க்க வந்த பெற்றோர் கனிமாெழி கூறும்பொது, அரசுப் பள்ளியில் நன்றாக சொல்லித் தருகிறார்கள் எனக் கேள்விப்பட்டோம். இந்தப் பள்ளியில் ஆங்கிலம் மற்றும் தமிழ் வழி பிரிவுகளும் உள்ளது. அரசின் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே எனது குழந்தையை இந்தப் பள்ளியில் சேர்த்துள்ளேன்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க:அதிதீவிர புயலாக மாறிய 'ஹமூன்' - எந்தெந்த மாநிலத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு!