உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு தற்போது உச்சத்தை அடைந்துள்ள நிலையில், இதுவரை சுமார் மூன்று லட்சம் பேர் இந்தப் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சுமார் 13 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவைப் பொறுத்தவரையில் இதுவரை 332 பேர் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றை தடுக்க மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.
இந்தச் சிக்கலான நேரத்தில் மருத்துவப் பணியில் ஈடுபட்டுள்ளோர் போக்குவரத்து, உணவு, ஊடகம் போன்ற அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ளோர் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும்வகையில் மக்கள் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்படும் என்று அண்மையில் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். அதனடிப்படையில், பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பின்படி நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு காலை 7 மணிக்கு தொடங்கியது.
காவல் துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்பவர்களைத் தவிர மற்றவர்கள் வீட்டிலேயே மக்கள் ஊரடங்கு மேற்கொள்கின்றனர். ஜனதா கர்ப்யூ எனப்படும் இந்த மக்கள் ஊரடங்கு இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பின்பற்றப்படுகிறது.