சென்னையில் அரசு அலுவலர்களுடன் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் ஆலோசனை பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மருத்துவர்கள் தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
அரசின் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவச் சங்கத்துடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அவர்கள் போராட்டத்தை திரும்பப் பெற்றனர். அவர்கள் இன்று முதல் பணிக்குத் திரும்பிவிட்டனர். ஆனால் சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முன்பு ஒரு சில மருத்துவர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் நோயாளிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதைக் கருத்தில்கொண்டு உடனடியாகப் பணிக்குத் திரும்ப வேண்டும்.
அரசைப் பொறுத்தவரை நோயாளியின் நலனே முக்கியமாகக் கருதுகிறோம். எனவே நோயாளிகளின் நலனைப் பாதுகாக்கும் வகையில் அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயங்காது. இவ்வாறு போராட்டம் நடத்துவது ஏற்புடையது அல்ல. ஆறு நாள்கள் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் நாளை பணிக்குத் திரும்ப வேண்டும்.