சென்னை: சைதாப்பேட்டையைச் சேர்ந்த மகா காந்தி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விஜய் சேதுபதிக்கு எதிராக மனு ஒன்றைத் தாக்கல்செய்தார். அதில், "மருத்துவப் பரிசோதனைக்காக நவம்பர் 2ஆம் தேதி இரவு பெங்களூரு விமான நிலையத்திற்குச் சென்றிருந்தேன்.
அங்கு நடிகர் விஜய் சேதுபதியை எதிர்பாராதவிதமாகச் சந்தித்தேன். திரைத் துறையில் அவரின் சாதனைகளைப் பாராட்டி நான் வாழ்த்துத் தெரிவித்தேன். ஆனால் அதனை ஏற்க மறுத்த விஜய் சேதுபதி பொதுவெளியில் என்னை இழிவுப்படுத்திப் பேசியதுடன், என் சாதி குறித்து தவறாகப் பேசினார்.
மறுநாள் ஊடகங்களில் தான் தாக்கப்பட்டதாக விஜய் சேதுபதி தரப்பில் அவதூறு பரப்பப்பட்டது. என் மீது தவறான வதந்தி பரப்பிய விஜய் சேதுபதி, அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் மீது குற்றவியல் அவதூறுச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வழக்கை விசாரித்த சென்னை சைதாப்பேட்டை ஒன்பதாவது பெருநகர உரிமையியல் நீதிமன்றம், நடிகர் விஜய் சேதுபதி, அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் ஜனவரி 4ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தது. இதனிடையே தனக்கு அனுப்பட்ட அழைப்பாணைய ரத்துசெய்யக் கோரியும், வழக்கை ரத்துசெய்யக் கோரியும் விஜய் சேதுபதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.