சென்னை:சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஸ் பழனிசாமி தயாரிப்பில், நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் 50 வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழா நேற்று (செப்.10) சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், நடிகர்கள் விஜய் சேதுபதி, நட்ராஜ், அருள்தாஸ், நடிகைகள் அபிராமி, மம்தா மோகன்தாஸ், இயக்குனர் நித்திலன் சாமிநாதன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஸ் பழனிசாமி தயாரித்து, குரங்கு பொம்மை படத்தின் இயக்குநர், நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் படத்திற்கு மகாராஜா என பெயரிடப்பட்டு உள்ளது.
இது விஜய் சேதுபதியின் 50 வது படமாகும். இந்நிலையில், மகாராஜா படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள எம்.ஆர்.சி நகரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, நிகழ்ச்சியில் நடிகர் நட்ராஜ் பேசியதாவது, "இந்த வருடத்தில் பேசக்கூடிய படமாக இது இருக்கும். விஜய் சேதுபதியுடன் முதல் படம் பண்றேன். படம் நன்றாக இருக்கும். அனவரும் படத்தில் மிகவும் நன்றாக பணியாற்றியுள்லனர்" என்று கூறினார்.
நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் லலித்குமார்,"மகாராஜா, விஜய் சேதுபதியின் 50 வது படமாகும். இதுவரை 4 படங்கள் அவரோடு வேலை செய்து இருக்கிறேன். 96 படத்தில் அவர் சம்பளம் வாங்கவில்லை என்று நினைக்கிறேன். மாஸ்டர் துவங்கும் போது, வில்லன் கதாபாத்திரத்துக்கு சேதுபதி தான் வேணும் என்று லோகேஷ் சொன்னார்.
அதனால் துக்ளக் தர்பார் படத்தின் தேதி மாற்றப்பட்டது. விஜய் சேதுபதியோடு நான் பணிபுரிந்த 96, மாஸ்டர், காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட 4 படமும் வசூல் ரீதியாக நன்றாக ஓடியது. மேலும், லியோ படத்தின் முதல் பாதி பார்த்து விட்டு லோகேஷ்க்கு போன் பண்ணி எடிட்டரை பாராட்டினேன்" என்று கூறினார்.