சென்னை: நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். பல்வேறு முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு வருகிற ஜூன் 22ஆம் தேதி இப்படத்தில் இருந்து ”வா நண்பா” என்ற முதல் பாடல் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றி, பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார். தமிழ்நாடு முழுவதும் உள்ள விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஏராளமான நல்ல விஷயங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 234 தொகுதிகளிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளை தேர்வு செய்து பரிசு மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று விஜய் அறிவித்தார்.
அதன்படி இன்று சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் மண்டபத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த நிகழ்ச்சிக்காக நீலாங்கரை பகுதியில் சுவர் ஓவியங்கள் அலங்கார ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளன. தனது கட்அவுட்கள் எதுவும் வைக்கக்கூடாது என்று விஜய் தரப்பில் கூறப்பட்டிருப்பதால் சுவர் ஓவியங்கள் வரையும் பணியில் ரசிகர்கள் ஈடுபட்டனர்.