'பிகில்' படம் 300 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாகத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து, அப்படத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம், பைனான்சியர் அன்புச்செழியன் உள்ளிட்டோர் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகக் கூறி, வருமான வரித்துறையினர் தமிழ்நாடு முழுவதும் அவ்விருவருக்கும் சொந்தமான 38 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். மேலும், அத்திரைப்படத்தின் கதாநாயகனான நடிகர் விஜய்யையும் அவரது வீட்டில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். 4 நாட்கள் நடைபெற்ற இந்த சோதனையின் முடிவில் பைனான்சியர் அன்புச்செழியன் மற்றும் அவரது நண்பருக்குச் சொந்தமான இடங்களில் இருந்து 77 கோடி ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் 1 1/4 கிலோ கிராம் தங்கம் உள்ளிட்டவற்றை, வருமான வரித்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
மேலும், நடிகர் விஜய் "பிகில்" படத்திற்கு வாங்கிய சம்பளப்பணம் தொடர்பாக, அவரிடம் விசாரணை நடைபெற்ற நிலையில், அவர் அந்தப் படத்திற்கு பெற்ற சம்பளம் மூலம் வாங்கியுள்ள அசையா சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களையும் வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
அதுமட்டுமல்லாது கடந்த 8ஆம் தேதி நடைபெற்ற இறுதி நாள் சோதனையின் போது, அடையாறு சாஸ்திரி நகரில் உள்ள விஜய்யின் அலுவலகத்தில் வருமான வரித்துறை அலுவலர்கள் மேற்கொண்ட சோதனையில் "பிகில்" திரைப்படம் தொடர்பான பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பாகவும் விஜய்யிடம் விசாரணை நடத்தவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் "பிகில்" திரைப்பட வசூலில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகக் கூறப்படும், 165 கோடி ரூபாய் வருவாய் ஏய்ப்பு குறித்து பைனான்சியர் அன்புச்செழியன் ஒப்புதல் அளித்துள்ளார் எனவும் வருமான வரித்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.