தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அபராதத் தொகையை நிவாரண நிதியாக கொடுக்க விருப்பமில்லை' விஜய் தரப்பு! - ரோல்ஸ் ராய்ஸ் கார்கள்

Vijay
Vijay

By

Published : Jul 28, 2021, 4:11 PM IST

Updated : Jul 28, 2021, 5:02 PM IST

16:02 July 28

சென்னை: கரோனா நிவாரண நிதியாக அரசிடம் 25 லட்சம் ரூபாய் ஏற்கனவே கொடுத்துள்ளதால், தனக்கு அபராதமாக விதிக்கப்பட்ட 1 லட்சம் ரூபாயை நிவாரண நிதியாக கொடுக்க விருப்பமில்லை என நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

நடிகர் விஜய், சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காருக்கான நுழைவு வரியை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருந்தார்.  

இந்த வழக்கை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும். 

அவர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர, ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது என கருத்துகளை தெரிவித்திருந்தார்.

மேலும், நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அதை முதலமைச்சரின் கரோனா நிவாரண நிதிக்கு இரண்டு வாரத்தில் வழங்க வேண்டும் எனவும், அதுகுறித்த அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில், மேல் முறையீடு செய்யப்பட்டது. அதில், அபராதத்தை ரத்து செய்ய வேண்டுமெனவும், தன்னை பற்றி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள விமர்சனங்களை நீக்க வேண்டுமெனவும் கோரியிருந்தார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி, ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு, நடிகர் விஜய்க்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தனர்.

மேலும் நுழைவு வரி பாக்கியை வசூலிக்க வணிக வரித்துறைக்கு செலான் பிறப்பிக்க உத்தரவிட்டிருந்தனர்.  

இந்த நிலையில் நடிகர் விஜய் வழக்கு தனி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு இன்று (ஜூலை.28) மீண்டும் பட்டியலிடப்பட்டிருந்தது. அப்போது விஜய் தரப்பில், அபராத உத்தரவுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, 1 லட்சம் ரூபாயை கரோனா நிவாரண நிதியாக தமிழ்நாடு அரசிடம் ஏன் வழங்ககூடாது என கேள்வி எழுப்பினார்.  

அதற்கு விஜய் தரப்பில் ஏற்கனவே 25 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக கடந்த ஆண்டு கொடுக்கப்பட்டுள்ளது என்றும், அபராதமாக விதிக்கப்பட்ட தொகையை கரோனா நிவாரண தொகையாக வழங்க விருப்பமில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: நடிகர் விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு தடை

Last Updated : Jul 28, 2021, 5:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details