சென்னை: 104 மருத்துவ சேவை உதவி மையத்தின் மூலம் மனநல ஆலோசகர்களைக் கொண்டு நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்குவதை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அபபோது மாணவர்களிடையே அவர் தொலைபேசி வாயிலாக உரையாற்றினார். அப்போது பேசிய அவர், 7.5 இட ஒதுக்கீடு இந்த வருடமும் உறுதி செய்யப்பட்டுள்ளது. நல்ல ரிஸல்ட் வரும், மாணவர்கள் தைரியமாக இருக்க வேண்டும் என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "தமிழ்நாட்டில் நேற்றைய தினம் நீட் தேர்வு முடிவடைந்துள்ளது. முதலமைச்சர் ஸ்டாலினின் அறிவுறுத்தல்படி நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கவுன்சிலிங் மூலம், மாணவர் மன நல கவுன்சிலிங் திட்டம் துவங்கப்பட்டு உள்ளது.
1,42,786 மாணவர்களுக்கு நீட் தேர்வு நடைபெற்று முடிந்துள்ளது. அவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்டு வருகிறது. 17000 மேற்பட்ட அரசு மற்றும் அரசு நிதி உதவி பெரும் மாணவர்களின் பட்டியல் பெறப்பட்டு அவர்களுக்கான ஆலோசனையை துவங்கி உள்ளோம். 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டின் மூலம் 555 மாணவர்களுக்கு கடந்த ஆண்டு வாய்ப்பு வழங்கப்பட்டது. இருப்பினும் 1,42,786 மாணவர்களுக்கு அவர்களது மன நலத்தை கவுன்சிலிங் மூலம் சீர் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீட் விலக்கு குறித்து இந்த அரசு ஒரே மன நிலையில் தான் இருக்கிறது" என அமைச்சர் தெரிவித்தார்.