சென்னை: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், காவி உடை மற்றும் திருநீறு, குங்குமப் பொட்டு வைத்து அம்பேத்கர் போஸ்டர் ஒட்டியதாக, சனாதன சங்பரிவார் அமைப்பைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கூட்டத்தில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், "கொள்கை முரண்பாடு உள்ளவர்கள் அம்பேத்கருக்கு ஏன் மாலை போட வேண்டும், யார் நீ, உனக்கும் அம்பேத்கருக்கும் என்ன சம்மந்தம்'' என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும் அம்பேத்கருக்கு காவி உடை, திருநீறு, குங்குமப் பொட்டு வைத்ததை எப்படி பொறுத்துக்கொள்ள முடியும் என்றும்; அது வரலாற்று திரிபு இல்லையா என்றும் தெரிவித்தார்.
தேர்தல் வரும்; போகும்; பதவி இருக்கும் இல்லாமல் போகும், ஆனால் கடைசி வரை தாங்கள் அம்பேத்கர், பெரியார் பிள்ளைகளாக களமாடுவோம் என திருமாவளவன் தெரிவித்தார். இந்தியாவிலேயே தேர்தல் களத்தில் இருந்துகொண்டு மனு ஸ்மிருதியை அச்சிட்டு மக்களுக்கு விநியோகம் செய்யக்கூடிய துணிச்சல் கொண்ட ஒரே இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் தான் எனக் கூறினார்.