சென்னை:நீட் தேர்வு மட்டும் இல்லாமல் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரும் வகையிலும், தேசியக்கல்விக் கொள்கையை எதிர்க்கும் வகையிலும் போராட்டம் அமைய வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு இளநிலை மருத்துவப் பட்டப்படிப்பு சேர்க்கைக்கான சட்டம் 2021 சட்ட முன் வடிவை, குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு ஆளுநர் உடனே அனுப்பக்கோரி பொதுப்பள்ளிக்கான மாநில மேடை உண்ணாநிலைப் போராட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு, அதன் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது.
காங்கிரஸும்,பாஜாகவும் ஒன்று
இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு வாழ்த்தி பேசும்போது, 'சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் என்றும் அறிவிப்பதைப் போல இந்தப் போராட்டத்தை நான் தொடரப் போறேன் என்று பிரின்ஸ் கஜேந்திரபாபு சொல்லியுள்ளார். ஏனெனில், ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு சட்ட மசோதாவையும் அவமதிக்கும் வகையில் நடந்து கொள்கின்ற போக்கைக் கண்டிக்கும் வகையிலும், ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் இந்த நிலைப்பாட்டை அவர் மேற்கொண்டுள்ளார். அவருடன் சேர்ந்து அனைவரும் போராட வேண்டிய ஒரு நிலை இருக்கிறது.
ஒன்றிய அரசு,மாநில அரசுகளை எவ்வாறு அணுகுகிறது; நடத்துகிறது என விளக்கமாகக் கூறியுள்ளார்கள். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் டெல்லியில் இருக்கின்ற அரசாங்கத்தைக் கூட்டாட்சி தத்துவம் என்ற அடிப்படையில் தான் வரையறை செய்து இருக்கிறது.
மாநில அரசுகளின் ஒன்றிய அரசுதான் டெல்லியில் அமைகின்ற அரசு. அப்படியென்றால் உண்மையான ஒன்றிய அரசு மாநிலங்களில் இருக்கின்ற அரசுதான். மாநில அரசுகளின் ஒன்றியம் தான் மத்திய அரசு. அது ஒரு கூட்டமைப்பு.
ஆனால், ஆட்சிக்கு வருகின்ற கட்சிகள் தொடக்கத்திலேயே காங்கிரஸ் ஆக இருந்தாலும் பாஜகவாக இருந்தாலும் இந்த நிலைப்பாட்டில் முரண்படுகின்றது. அதனைச் சுற்றி காப்பதும் எதிர்ப்பதும் அதன் மாண்புகளையும் காப்பதும் மாநில அரசின் கடமையாக இருக்கிறது.
நமக்குத் தெரிந்த உரிமைகள் அவர்களுக்குத் தெரியாமல் இல்லை. நமக்கு தெரிந்த ஒரு சட்டம் அவர்களுக்குத் தெரியாமல் இல்லை. நாம் பேசுகின்ற அரசியல் அவர்களுக்கு அறியாமல் இல்லை. எனவே, இதனை மோடி, அமித் ஷா போன்றவர்களுக்கு உணர்த்த வேண்டிய தேவை இல்லை.