சென்னை அரும்பாக்கம் மெகா மார்ட் ஷோரூம் அருகே பெரம்பூரிலிருந்து திருவேற்காடு செல்லும் '29E' அரசுப் பேருந்தில் பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த இருதரப்பு மாணவர்களுக்கு இடையே 'ரூட்டு தல' (யார் பெரிய ஆள்) விவகாரத்தில் வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
இதில் ஒரு தரப்பினர் அவர்கள் வைத்திருந்த அரிவாளால் மற்றொரு தரப்பு மாணவர்களை சரமாரியாக வெட்டத் தொடங்கினர். இதைக்கண்ட பயணிகள் பேருந்தை விட்டு இறங்கி அலறியடித்து ஓடினர்.
இந்தப் பிரச்னையில் இரண்டாமாண்டு தத்துவம் படிக்கும் மாணவன் வசந்தகுமார் உள்ளிட்ட இருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. பின்னர் இது தொடர்பாக பொதுமக்கள் அளித்தப் புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அரும்பாக்கம் காவல் துறையினர், காயமடைந்த மாணவர்கள் இருவரையும் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
விஸ்வரூபமெடுக்கும் ரூட்டு தல விவகாரம் மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக இரண்டு பேரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்நிலையில், இந்தச் சம்பவத்திற்கு பழிவாங்கும் நோக்கில் எதிரணியிலிருந்த ஒரு மாணவனை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று அரை நிர்வாண கோலத்தில் அவரது வாயால் தங்களது அணிதான் கெத்து என மிரட்டும் தொனியில் காணொலி எடுத்து வெளியிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக கல்லூரி நிர்வாகம் இரண்டு மாணவர்களை கல்லூரியிலிருந்து இடைநீக்கம் செய்துள்ளது.