சென்னையில் கரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் காவலர்கள், கரோனா தொற்று ஏற்பட்டு பின்னர் குணமடைந்து மீண்டும் பணிக்கு திரும்பும் போது அவர்களை பாராட்டும் விதமாக காவல் ஆணையர் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி கவுரவித்து வருகிறார்.
இதேபோன்று செப்.18ஆம் தேதி வேளச்சேரியில் நடந்த நிகழ்ச்சியின் போது கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து பணிக்கு திரும்பிய ஊர்க்காவல் படை வீரர்களுக்கு காவல் ஆணையர் மகேஷ்குமார் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.
இந்நிலையில், தனிப்பட்ட முறையில் அலுவலர்களுடன் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக தனது பெயரை பட்டியலில் சேர்க்கவில்லை என கரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த மயிலாப்பூர் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த ரஞ்சித் என்பவர் குற்றம்சாட்டி வீடியோ ஒன்றை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதிகாரத்துடன் மிரட்டும் காவல் அலுவலர்கள்
அதில், மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஊர்க்காவல் படை வீரராக கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வந்தேன். கடந்த 29ஆம் தேதி கரோனாவால் பாதிக்கப்பட்டு 10 ஆம் தேதி குணமடைந்து பணியில் சேர்ந்தேன். ஆனால், செப்.18ஆம் தேதி நடந்த பதக்க பட்டியலில் தனது பெயர் இடம்பெறவில்லை. இதுகுறித்து அலுவலர்களிடம் கேட்ட போது உனது பெயரை பரிந்துரை செய்யவில்லை என அதிகாரத்துடன் மிரட்டும் விதமாக பேசினர்.
"இந்த சான்றிதழ் உயர் பதவிக்கு வழிவகுக்கும்"
கூடுதல் ஆணையர் தினகரன் முகாம் அலுவலகத்தில் சென்று கேட்டபோது அவர்களால் ஒன்றும் செய்யமுடியாது என தெரிவித்தனர். உயர் அலுவலர்களுடன் ஏற்பட்டுள்ள தனிப்பட்ட பிரச்னையின் காரணமாக தனது பெயரை பட்டியலில் சேர்க்கவில்லை.
இந்த சான்றிதழ் தனக்கு பதவி உயர்வு வழங்க வழிவகுக்கும். ஊர்க்காவல் படை சங்கத்தில் இருப்பதால் அலுவலர்கள் பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்படுகின்றனர் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க:உலகளவில் கரோனா தாக்கம்!