சென்னை: தமிழ்நாடு, சுமார் 22 ஆயிரத்து 877 ச.கி.மீ பரப்பளவில் வனப்பகுதியைக் கொண்டுள்ளது. இந்த பரப்பளவு, தமிழ்நாட்டு புவிப் பரப்பளவில் 17.59 சதவீதம் ஆகும். இந்த வனப்பகுதிகளில் குறிப்பாக மேகமலை, முண்டந்துறை, முதுமலை, ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளில் புலிகள் காப்பகம் உள்ளன. குறிப்பாக, மேகமலை பகுதி பாதுகாக்கபட்ட வனப்பகுதியாக கருதப்பட்டு வருகிறது.
இதையடுத்து 1988ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூரை தலைமை இடமாகக் கொண்டு, சாம்பல் நிற அணில்கள் சரணாலயத்தை அறிவித்தது, தமிழ்நாடு அரசு. இங்கு சாம்பல் நிற அணில்கள், காட்டெருமை, யானை, மான், கரடி, சிங்கவால் குரங்குகள், காட்டுப்பன்றிகள், புள்ளி மான்கள், வரையாடுகள் போன்ற பல்லுயிர்கள் உள்ளன. அதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகளவில் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், சிறுத்தைகள் மற்றும் புலிகளை பாதுகாப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வந்தன.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் சிறுத்தைகளின் உயிரிழப்பு அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில், நீலகிரி மாவட்டத்தில் சிறுத்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, வனவிலங்குகளான புனகு பூனை, காட்டுப்பன்றி, கழுதைப்புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வேட்டை நாய்கள் மூலம் வேட்டையாடப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதேபோல், வேட்டை நாய்கள் கொண்டு வனவிலங்குகளை வேட்டையாடுவோர் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், ராஜாபாளையம் பகுதிகளில் வேட்டை நாய் வைத்து வனவிலங்குகளை வேட்டையாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பாடல், வேட்டை, குடி போன்ற வசனங்களுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து வனவிலங்கு ஆர்வலர் ஒருவர் கூறுகையில், "தமிழ்நாட்டில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் வேட்டை நாய்களை வைத்து வனவிலங்கை வேட்டையாடுகின்றனர்.