சென்னை :வேலை - வாழ்க்கை இடையே சமநிலையைப் பராமரிக்க வேண்டும் எனவும், ஒருவரின் தொழில் கடமைகளுக்கும், குடும்பப் பொறுப்புகளுக்கும் சம அளவிலான முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும் வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று (டிசம்பர் 27) நடைபெற்ற வி.எல். இந்திரா தத் எழுதிய 'டாக்டர் வி.எல். தத்: ஒரு முன்னோடியின் வாழ்க்கைப் பயணத்தின் பார்வைகள்' என்ற ஆங்கில நூலை வெங்கையா நாயுடு வெளியிட்டார்.
உடல்நலத்துடன் மனநலமும்
அதன்பின்னர் இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், "வேலைக்கும், வாழ்க்கைக்கும் இடையே சமநிலையைத் தொழிலாளர்கள் எளிதாகப் பராமரிக்கும் வகையில் மனிதவளக் கொள்கைகளை தொழில் துறைத் தலைவர்கள் வகுக்க வேண்டும்.
இது ஊழியர்களின் சிறந்த செயல்பாட்டுக்கு வழிவகுப்பது மட்டுமல்லாமல்; சமூகத்தில் தற்போது அதிகரிக்கும் மனநலப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் உதவும். அதிகளவிலான மன அழுத்தத்தை மக்கள் சந்திக்கும் வேலையில், உடல் நலத்துடன் மனநலமும் முக்கியத்துவம் பெறுகிறது. மன அழுத்தத்தைப் போக்க வெளியிடங்களுக்குச் சென்று மக்கள் சிறிது நேரம் செலவிட வேண்டும்.
இந்தக் குணத்தைக் காண முடியவில்லை
குடும்ப வாழ்க்கைக்கும், தொழிலுக்குமான சமநிலையைத் தொழில் அதிபர் வி.எல். தத் சரியாகப் பராமரித்தார். இது அனைத்துத் தொழில் அதிபர்களுக்கும், தொழில் முனைவோர்களுக்கும் பாடமாக இருக்க வேண்டும்.
மக்களுடன் மகிழ்ச்சியாக இருப்பதற்குத் தத் அதிக முக்கியத்துவம் அளித்தார். தற்போதைய போட்டி தொழில் சூழலில் இந்தக் குணத்தைக் காண முடியவில்லை. தத்துக்கு அவரது தொழிலாளிகள் எப்போதும் முக்கியமானவர்களாக இருந்தார்கள்.