குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சென்னை ஐஐடியில் 'அடுத்த தலைமுறைக்கான 10 ஆண்டு குறித்த தொலைநோக்கு பார்வை' என்ற பெயரில் நடந்த கருத்தரங்கில் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய வெங்கையா நாயுடு, "இன்று தலைவர் ஆக எளிமையான வழியாக பணம், சாதி, குற்றப்பின்னணி, மதம் ஆகியவைப் பார்க்கப்படுகிறது. சமுதாயத்தில் சில பேர் நல்ல வழிகள் மூலமாக மக்களை திரட்ட முடியாததால் சாதி, மதம் மூலம் மக்களை திரட்டுகின்றனர்.
தற்போது கிராமத்திற்கும், நகரத்திற்குமான இடைவெளி அதிகமாகிவிட்டது, அதை குறைக்க மாணவர்கள் பாடுபட வேண்டும். எனவே, அவர்கள் கிராமங்களை நோக்கிச் செல்ல வேண்டும். விவசாய பொருள்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. விவசாயிகளுக்கு லாபத்தை ஏற்படுத்தும் தொழில்நுட்பங்களை ஐஐடி போன்ற நிறுவனங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.
வருங்காலத்தில் தண்ணீர் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுக்கும். சென்னை போன்ற நகரங்களில் நீர் நிலைகளை ஆக்கிரமித்தால் வெள்ளத்தால் பாதிக்கப்படுவது தொடர் கதையாகிவிடும். பேரிடர் மேலாண்மை, ஆளில்லா விமானம் உள்ளிட்ட தொழில்நுட்பங்களால் மக்களுக்கு உதவ வேண்டும்.