சென்னை:ஐஐடி சென்னை வளாகத்தில் முன்னாள் மாணவர்களின் பங்களிப்புடன் கட்டப்பட்ட புத்தாக்க வசதி மையத்தினை துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் திறந்து வைத்தார். சங்கர் மற்றும் சுதா புத்தாக்க மையம் என்ற பெயரில் கட்டப்பட்டுள்ள இந்த மையமானது, முன்னாள் மாணவர்களின் பங்களிப்புடன் புதிய கண்டுபிடிப்புகள் புத்தாக்க நிறுவனங்கள் தொடங்குவதில் முக்கியப் பங்கு வகிக்க உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடி, தமிழ்நாட்டிற்கு முதன்முறையாக வருகை தரும் துணை ஜனாதிபதி ஐஐடி-க்கு வருகை தருவது மகிழ்ச்சியளிப்பதாகவும், 2022ல் தொடர்ந்து 4-வது ஆண்டாக முதல் இடத்தில் சென்னை ஐஐடி இருந்து வருகிறது. பொறியியல் பிரிவில் தொடர்ந்து 6-வது ஆண்டாக சென்னை ஐஐடி முதலிடத்தில் உள்ளதையும், பல்வேறு கண்டுபிடிப்புகளையும் குறிப்பிட்டுப் பேசினார்.
நிகழ்ச்சியில் துணை குடியரசுத்தலைவர் ஜகதீப் தன்கர் பேசும்போது, '1989ல் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். அப்போது 30 கட்சிகள் 30 வருடமாக கூட்டணி கட்சிகளாகவே அரசை நடத்தி வந்தனர். 2014-ல் அரசியலில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து 2019-ல் வளர்ச்சிக்கான அடித்தளம் கிடைத்தது. இதன் விளைவாக நாட்டின் நிதிநிலை அறிக்கையில் ஆராய்ச்சிக்கான நிதிகள் அதிகரித்து ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்தியா புத்தாக்க நிறுவனங்கள் தொடங்குவதில் சிறந்த நாடாக மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. விரைவில் முதல் இடத்தைப் பிடிக்கும். இதில் ஒரு சில மாவட்டங்கள் கீழேயும் சில மாவட்டங்கள் மேலேயும் உள்ளன. இதில் சமநிலையைக் கொண்டு வர வேண்டும். சென்னை ஐஐடியில் மட்டுமே 300 புத்தொழில் நிறுவனங்கள் 40 ஆயிரம் கோடி ரூபாய் நிதிப்பங்களிப்பில் பயணிக்கிறது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
உலகளாவிய கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைமை இடங்களை இந்தியர்கள் வகிக்கின்றனர். 2047-ல் இங்குள்ள மாணவர் பலர் முக்கிய இடங்களில் இருப்பீர்கள். மனித வளத்தில் இந்தியர்களின் சிறந்த சிந்தனைத்திறன் வழி நடத்தும். 220 கோடி கோவிட் தடுப்பூசிகளை செலுத்தியுள்ளோம். கோவிட்-19 வைரஸை வெற்றிகரமாக எதிர்கொண்டோம். அனைவருக்கும் கோவிட் டிஜிட்டல் சான்றிதழ் வழங்கியுள்ளோம். பல நாடுகளில் இன்னும் அந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.