சென்னை: தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியதாவது, "அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தற்போது உள்ள பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்க துணை வேந்தர் பதிவாளர் தேர்வு, துறை அதிகாரிகளுடன் கருத்தாய்வு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. 2013 இல் அரசுடமையக்கப்பட்டு, தனியார் பல்கலையாக இருந்த போது அளவுக்கு மீறி 1,573 பேர் ஆசிரியர்களாக, 4,277 பேர் அலுவலக பணியாளர்களாக இருந்துள்ளனர்.
அரசு எடுத்துகொண்ட பிறகு அளவுக்கு அதிகமாக உள்ள பணியாளர்களை அரசு கல்லூரிகளில் டெபுடேசன் முறையில் பிற கல்லூரிகளில் பணியில் உள்ளனர். 1,573 ஆசிரியர்களில் 1,204 ஆசிரியர்கள் டெபுடேசன் முறையில் பிற கல்லூரிகளில் பணியாற்றுகிறார்கள். இன்னும் 369 ஆசிரியர்கள் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணிபுரிகின்றனர். 3,246 பேர் அலுவலக பணியாளர்களாக டெபுடேசன் முறையில் தலைமைச் செயலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணியாற்றிவருகின்றனர். 1,031 நபர்கள் அலுவலக பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். மீதமுள்ள 369 ஆசிரியர்கள் 20 புதிய கல்லூரிகளில் பணியில் சேர்ப்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டது.
தற்காலிக வேலையாட்கள் 1,000 முதல் 10,000 ரூபாய் வரை ஊதியம் பெறும் 417 பேர் உள்ளனர். இவ்வளவு சங்கடமாக நிதி நிலைமையில் 3 மாத ஊதியம் அளிக்க, பணி நீட்டித்து உத்தரவிட்டு உள்ளார் முதலமைச்சர். இவற்றையெல்லாம் ஆலோசனை செய்ய ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதலமைச்சர் தலைமையில் துணை வேந்தர்கள் மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.
முதலமைச்சர் தலைமையிலான துணை வேந்தர்கள் மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது. மொழி பாடங்கள் குறித்து எல்லா பல்கலைக்கழகத்திலும் ஒரே மாதிரியாக, பாடத்திட்டம் இருப்பது குறித்தும், செயல்முறை படுத்துவது குறித்தும் முதலமைச்சர் தலைமையிலான துணை வேந்தர்கள் மாநாட்டில் ஆலோசிக்கப்படும்.