தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'துணைவேந்தர் பதவியில் சூரப்பா தொடர்வது கேலிக்கூத்தானது' - மு.க.ஸ்டாலின்

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீதான ஊழல் புகார்களை விசாரிக்க, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ள நிலையிலும் துணை வேந்தர், எந்தவித உறுத்தலும் இன்றி, பதவியில் தொடருவது கேலிக்கூத்தாக இருக்கிறது என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

vice chancellor surappa case mk stalin demand
'சூரப்பா துணைவேந்தர் பதவியில் தொடர்வது கேலிக்கூத்தானது'- மு.க.ஸ்டாலின்

By

Published : Nov 15, 2020, 4:31 PM IST

சென்னை:இது தொடர்பாக அவர் இன்று (நவம்பர் 15) வெளியிட்டுள்ள அறிக்கையில், "அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீதான ஊழல் புகார்களை விசாரிக்க, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ள நிலையிலும் அந்தத் துணை வேந்தர், எந்தவித உறுத்தலும் இன்றி, பதவியில் தொடருவது கேலிக்கூத்தாக இருக்கிறது.

ஒருவேளை, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஒரு முறை அல்ல பல முறை ஆளான போதும், வழக்குகள் விசாரணைகள் நடைபெறும் போதும் முதலமைச்சரும், அமைச்சர்களும் பதவிகளில் தொடர்ந்து இருந்துவரும் போது, நமக்கு மட்டும் என்ன என்ற எண்ணம் காரணமாக இருக்குமோ என்று மாணவர்கள் மத்தியில் கருத்து ஒன்று சுற்றிக் கொண்டிருக்கிறது.

சூரப்பா மீது பிப்ரவரி மாதத்தில் வந்த புகாரை ஒன்பது மாதங்களுக்கு மேல் ஏன் நிலுவையில் வைத்திருந்தது அதிமுக அரசு? இந்த ஒன்பது மாதங்கள் இரு தரப்பிற்கும் இடையில் நடைபெற்ற பேரம் என்ன? என்பது தனி விசாரணைக்குட்பட்டது என்றாலும்; இப்போது ஊழல் விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகும், துணை வேந்தரை பதவியில் நீடிக்க அனுமதித்திருப்பது, ஒரு கண்துடைப்பு நாடகமே என்று பலரும் வெளிப்படையாகவே பேசுகிறார்கள்.

280 கோடி ரூபாய் ஊழல் புகார்களை விசாரிக்க உத்தரவிட்டுள்ள உயர் கல்வித்துறையின் அரசு ஆணையில், 'தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் மட்டும் 80 கோடி ரூபாய் லஞ்சம் கைமாறியுள்ளது' என்று துணை வேந்தர் சூரப்பா மீதும் அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள துணை இயக்குநர் சக்திநாதன் மீதும் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

லஞ்சப்பணம் வசூல் செய்யப்பட்டுள்ளது என்று அரசுக்குத் தெரிந்த பிறகும் முதலமைச்சர் பழனிசாமியும், உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகனும் அந்த இருவரையும் தற்காலிகப் பணி நீக்கம் (சஸ்பென்ட்) செய்யாமல் பாதுகாப்பது ஏன்? 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியரை இடைக்காலப் பணி நீக்கம் செய்து ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது போல் விளம்பரப்படுத்திக் கொள்ளும் அதிமுக அரசு, 80 கோடி ரூபாய் லஞ்சம் வசூல் செய்து விட்டார்கள் என்று அரசாணையில் குற்றஞ்சாட்டியும், இதுநாள் வரை துணைவேந்தரையும், துணை இயக்குநரையும் பணி நீக்கம் செய்யாமல் இருப்பது திரைமறைவில் என்ன பேரம் நடக்கிறதோ என்ற சந்தேகத்தை அனைவரது மனங்களிலும் எழுந்துள்ளது.

கடந்த காலங்களில் இதுபோன்ற ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்த போது, திமுக ஆட்சியில் கோவை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக இருந்த ராதாகிருஷ்ணன் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டார். அதே போல், அதிமுக ஆட்சியின் போது அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவஹர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

இப்போது இவ்வளவு கடுமையான ஊழல் புகாரில், துணை வேந்தராக இருக்கும் சூரப்பாவிற்கு மட்டும் ஏன் விதி விலக்கு? குறிப்பாக ஓய்வு பெற்ற நீதியரசர் பி. கலையரசன் விசாரணை ஆணையம் நாளை (நவம்பர் 15) விசாரணையை தொடங்கப் போகிறது என்று செய்திகள் வரும் நிலையில் மனசாட்சியை உலுக்கும் ஊழல் புகார்களுக்கு உள்ளான துணை வேந்தரை உடனடியாக பணி நீக்கம் செய்வதுதான் நேர்மையான, நியாயமான விசாரணைக்கு வழி விடும்.

ஆகவே, அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பாவை இனியும் காலதாமதம் இன்றி உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கேட்டுக் கொள்கிறேன். அது மட்டுமின்றி ஊழல் புகார்கள் தொடர்பான அனைத்து ஆவணங்களும் அழிக்கப்பட்டுவிடாமல் இருக்க உடனடியாக அவை அனைத்தையும் விசாரணை ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" எனத் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க:'ஒரு பைசாகூட கையூட்டு பெறவில்லை, விசாரணையை எதிர்கொள்ளத் தயார்' - துணைவேந்தர் சூரப்பா

ABOUT THE AUTHOR

...view details