சென்னை: தமிழ்சினிமாவின் பிரபல வசனகர்த்தாவான ஆரூர்தாஸ் (91) நேற்று மாலை காலமானார். 1931 ஆம் ஆண்டு திருவாரூரில் பிறந்த ஆரூர்தாஸ் சினிமா மீது கொண்ட ஆசை காரணமாக சென்னைக்கு வந்து, 1955-ம் ஆண்டு தஞ்சை ராமதாசின் உதவியாளராக சினிமா வாழ்க்கையை தொடங்கி, வாழவைத்த தெய்வம் என்ற திரைப்படத்திற்கு முதன் முதலில் வசனம் எழுதினார்.
ஏசுதாஸ் எனும் இவரது பெயரையும் தனது ஊரான திருவாரூரையும் இணைத்து ஆரூர்தாஸ் என வைத்துக் கொண்டார். எம்.ஜி.ஆர்., சிவாஜி என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார். என்.ஜி.ஆரின் தாய் சொல்லை தட்டாதே, தாயைக்காத்த தனயன், தொழிலாளி, சிவாஜி கணேசன் நடித்த பாசமலர், படித்தால் மட்டும் போதுமா, பார் மகளே பார், புதிய பறவை என பல படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார்.
மேலும் இவர் தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என 1000ற்கும் மேற்பட்ட படங்களுக்கு கதை வசனம் எழுதி இருக்கிறார். ஆரூர்தாஸ் தமிழில் கடைசியாக 2014-ம் ஆண்டு வடிவேல் நடித்து வெளிவந்த 'தெனாலிராமன்' படத்துக்கு வசனம் எழுதி இருந்தார். வசனகர்த்தாவாக மட்டுமல்லாமல் 1967-ம் ஆண்டு ஜெமினி கணேசன் நடிப்பில் 'பெண் என்றால் பெண்' என்ற திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.