சென்னை: கோயம்பேடு வி.ஆர். வணிக வளாகத்தில் தானியங்கி மது விற்பனை இயந்திரம் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டில் முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்ட தானியங்கி மது விற்பனை இயந்திரம். தமிழ்நாட்டில் மொத்தம் 5ஆயிரத்து 328 மது சில்லறை விற்பனைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில், தினமும் ஒரு லட்சத்திற்கும் குறைவாக விற்பனையாகும் 500 கடைகளை கண்டறிந்து மூடப்படும் என டாஸ்மாக் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். தற்போது அதற்கான பணியையும் டாஸ்மாக் நிறுவனம் தொடங்கியுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, சர்வதேச நிகழ்சிகள் மற்றும் திருமண மண்டபங்களில் மது விற்பனை செய்யப்படும் என ஒரு சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதற்குப் பல்வேறு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் திருமண மண்டபங்களில் மது விற்பனையை மட்டும் அரசு ரத்து செய்தது. சமீப காலமாக மதுப்பாட்டில்களில் இருக்கக்கூடிய தொகையை விட அதிக தொகை பெறுவதாக புகார்கள் அதிகளவில் டாஸ்மாக் நிறுவனத்திற்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதை தவிர்ப்பதற்காக தானியங்கி மது விற்பனை இயந்திரத்தை டாஸ்மாக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு, சென்னை கோயம்பேடு வி.ஆர். வணிக வளாகத்தில் தானியங்கி மது விற்பனை இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தில் தேவையான மதுபான வகையைத் தேர்வு செய்து, அதற்கான தொகையைச் செலுத்தினால், இயந்திரத்தில் இருந்து மதுபானத்தை பெற்றுக்கொள்ளலாம். இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட அதிக தொகை கொடுப்பதைத் தவிர்க்கலாம் என டாஸ்மாக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக சோதனை முயற்சியாக 4 எலைட் மதுபானக் கடைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 21 வயது நிரம்பியவர்கள் மட்டுமே இந்த இயந்திரத்தில் இருந்து மதுபானம் பெற அனுமதிக்கப்படும் என டாஸ்மாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.