சென்னை: தமிழ்நாட்டில் கரோனா, ஒமைக்ரான் பரவலையடுத்து இன்று (ஜன.6) முதல் இரவு ஊரடங்கைத் தமிழ்நாடு அரசு அமல்படுத்தியுள்ளது. இதில் பல்வேறு கட்ட கட்டுப்பாடுகளை விதித்து தமிழ்நாடு அரசு நேற்று உத்தரவிட்டது.
மேலும் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து வகை பள்ளி கல்லூரிகளுக்கும் ஜனவரி 20ஆம் தேதி வரை தமிழ்நாடு அரசு விடுமுறை அளித்துள்ளது. அதனைத் தொடர்ந்து பொறியியல் கல்லூரி மாணவர்களுக்குச் செய்முறைத் தேர்வுகள் தொடங்கப்பட இருந்த நிலையில் அரசின் உத்தரவைப் பின்பற்றி அண்ணா பல்கலைக்கழகமும் விடுமுறை அறிவித்தது.
அரசின் உத்தரவை மீறிய வேல்ஸ் கல்லூரி
இந்த நிலையில் சென்னையை அடுத்த பல்லாவரத்தில் இயங்கிவரும் வேல்ஸ் தனியார் கல்லூரியில் இன்று தேர்வு கட்டாயம் நடைபெறும் எனவும், விடுமுறை அளிக்கப்படவில்லை எனவும் கூறி மாணவர்கள் அனைவரையும் கல்லூரிக்கு வர வைத்துள்ளனர்.
அரசின் உத்தரவை மீறி கல்லூரி நிர்வாகம் மாணவர்களைத் தேர்வெழுத வரவைத்தது மாணவர்கள் மற்றும் அவர்கள் பெற்றோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தொடர்ந்து பல்வேறு கல்லூரி மாணவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டு வரும் நிலையில் மாணவர்களைத் தேர்வு எழுத வரவைத்த வேல்ஸ் கல்லூரி நிர்வாகம் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க:ஊரடங்கு நாளன்று போட்டித்தேர்வுகளுக்குச் செல்பவர்களுக்கு அனுமதி