தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'திட்டமிட்டு தமிழின் மீது தொடர் தாக்குதல்' - கண்டித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி! - political news update

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் நீதிபதிகளுக்கான தேர்வுக்கு தமிழ் தேவையில்லை என்று அறிவிப்பதா என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

Velmurugan-TVK -slams -TNPSC

By

Published : Sep 24, 2019, 12:39 PM IST

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் நீதிபதிகளுக்கான தேர்வுக்கு, தமிழ் தெரியாதவர்களும் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களின் எதிர்ப்பையும், கண்டனங்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில்,
"தமிழ்நாட்டில் சிவில் நீதிபதிகளாகப் பணியாற்ற வேண்டியவர்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வு செய்கிறது. இந்தாண்டிற்கான தேர்வு அறிவிப்பு கடந்த 9ஆம் தேதி வெளியானது. அதில் 176 நீதிபதிகளுக்கான தேர்வுக்கு, வரும் அக்டோபர் 9ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விண்ணப்பத்தில் மேற்கொண்டு ஒரு விதிமுறை சேர்க்கப்பட்டிருக்கிறது. அது "தமிழ் தெரியாதவர்களும் விண்ணப்பிக்கலாம். அவர்கள் பணியில் சேர்ந்து இரண்டு ஆண்டுகளில் ஓரளவு தமிழைக் கற்றுக் கொண்டால் போதும். அதாவது அரைகுறைத் தமிழே போதுமானது" என்பதுதான்.

இதில் முதன்மைக் கேள்வி,

தமிழ்நாடு பணியாளர் தேர்வாணைய (TNPSC) நடைமுறை மற்றும் சட்டதிட்டங்களையே அறியாதவர் எப்படி சட்ட நெறிமுறைகளைக் கையாளமுடியும்?

கீழ்நிலையில் உள்ள தனது பணியாளர்களுடன் தமிழ் தெரியாத நீதிபதி எப்படிப் பேசுவார்?

காவலர் ஆவணங்கள் அனைத்துமே தமிழில்தான் இருக்கும், தமிழ் தெரியாத நீதிபதி அதனை எப்படிப் புரிந்துகொள்வர்?

கீழ் நீதிமன்ற வழக்கு விவரங்களும் தமிழில் தான் இருக்கும் அதை எப்படிப் புரிந்துகொள்வர்?

தமிழ் என்று வரும்போது நியாயம், நீதி, நேர்மை, உண்மை, வரலாறு, மரபுகள், அறிவியல் அனைத்துமே பலியிடப்படுகின்றன என்பதுதான் உண்மை.
அறிவியல் வெளிச்சம் இண்டு இடுக்குகளில் எல்லாம் பரவும் இந்தக் காலத்தில், ஆர்எஸ்எஸ்-பாஜக-அதிமுகவின் இந்தக் கொடுங்கதை முடிவுக்கு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை. இதையே எச்சரிக்கையாகவும், கண்டனமாகவும் பதிவு செய்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! " எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: புதிய தமிழகம் கட்சியினர் கொலை மிரட்டல் - முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா புகார்

ABOUT THE AUTHOR

...view details